௮
எலிசா சூனேமியப் பெண்ணைப் போகச் சொன்னது
௧ எலிசா தன்னால் உயிர்தரப்பட்ட பிள்ளையின் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான். அவன், “நீயும் உனது குடும்பத்தாரும் இன்னொரு நாட்டிற்குப் போகவேண்டும். ஏனென்றால் கர்த்தர் இங்கு பஞ்ச காலத்தை உருவாக்க தீர்மானித்துள்ளார். இந்நாட்டில் இப்பஞ்சம் ஏழு ஆண்டுகளுக்கு இருக்கும்” என்றான்.
௨ எனவே, அப்பெண் தேவமனிதன் சொன்னது போலவே நடந்துகொண்டாள். பெலிஸ்திய நாட்டில் ஏழு ஆண்டுகள் வசிப்பதற்கு அவள் தன் குடும்பத்தோடு சென்றாள். ௩ ஏழு ஆண்டுகள் முடிந்ததும் அவள் பெலிஸ்தியர்களின் நிலத்திலிருந்து திரும்பினாள்.
அவள் அரசனோடு பேசுவதற்குச் சென்றாள். தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்காக முறையிட்டாள்.
௪ அரசன் தேவமனிதனுடைய வேலைக்காரனான கேயாசியோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் எலிசாவின் வேலைக்காரனிடம், “எலிசா செய்த அருஞ்செயல்களையெல்லாம் கூறு” எனக்கேட்டான்.
௫ கேயாசி, மரித்துப்போன குழந்தைக்கு எலிசா உயிர் கொடுத்ததைப்பற்றிச் சொன்னான். அப்போது அந்தப் பெண் அங்கு வந்து, தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப்பெற உதவவேண்டும் என்று அரசனிடம் வேண்டினாள். அவளைக் கண்டதும் கேயாசி, “எனது ஆண்டவனாகிய ஆண்டவனே! இவள் தான் அந்தப் பெண்! இந்தப் பையனுக்குத்தான் எலிசா உயிர்கொடுத்தான்!” என்று கூறினான்.
௬ அரசன் அவளது விருப்பத்தை விசாரிக்க அவளும் விளக்கிச் சொன்னாள்.
பிறகு அரசன் ஒரு அதிகாரியை அவளுக்கு உதவுமாறு நியமித்தான். அவனிடம், “இவளுக்குரியவற்றையெல்லாம் இவள் பெறுமாறு செய். இவள் இந்த நாட்டைவிட்டு போன நாள் முதல் இன்றுவரை இவள் நிலத்தில் விளைந்த தானியத்தையும் இவள் பெறுமாறு செய்” என்றான்.
பெனாதாத் ஆசகேலை எலிசாவிடம் அனுப்பினது:
௭ எலிசா தமஸ்குவுக்குச் சென்றான். ஆராம் தேசத்து அரசன் பெனாதாத் நோயுற்றிருந்தான். ஒருவன் அவனிடம். “தேவமனிதர் (தீர்க்கதரிசி) இங்கே வந்துள்ளார்” என்றான்.
௮ பிறகு பெனாதாத் ஆசகேலிடம், “அன்பளிப்போடு போய் தேவமனிதரை (தீர்க்கதரிசி) சந்தி, நான் நோயிலிருந்து குணமடைவேனா என்று அவரை கர்த்தரிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறு” என்றான்.
௯ எனவே, ஆசகேல் எலிசாவை சந்திக்க சென்றான். தன்னோடு அன்பளிப்பையும் எடுத்துச்சென்றான். தமஸ்குவிலுள்ள சிறந்த பொருட்களையெல்லாம் கொண்டு சென்றான். அவற்றை 40 ஒட்டகங்களில் எடுத்துச் சென்றான். அவன், “உங்கள் தொண்டனான ஆராமின் அரசரான பெனாதாத் என்னை உங்களிடம் அனுப்பினார். நோயிலிருந்து தான் குணமாவேனா என்று கேட்கச்சொன்னார்” என்றான்.
௧௦ பிறகு எலிசா ஆசகேலிடம், “போய் பெனாதாத்திடம், ‘நீ நோய் நீங்கிப் பிழைப்பாய்’ என்று கூறு. எனினும், கர்த்தர் ‘அவன் மரித்துப்போவான்’ என்றே கூறுகிறார்” என்றான்.
எலிசா ஆசகேலைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னது
௧௧ எலிசா ஆசகேலை உற்றுப் பார்த்து பிறகு அழுதான். ௧௨ ஆசகேல் அவனிடம், “ஐயா ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான்.
அதற்கு எலிசா, “நீ இஸ்ரவேலர்களுக்குச் செய்யப்போகும் தீமைகள் என்னென்ன என்பதை நான் அறிவேன். அதற்காக அழுகிறேன். நீ அவர்களின் கோட்டையுள்ள நகரங்களை எரிப்பாய். நீ வாளால் இளைஞர்களைக் கொல்வாய், குழந்தைகளைக் கொல்வாய், கருவிலுள்ள குழந்தைகளையும் கீறிப்போடுவாய்” என்றான்.
௧௩ ஆசகேல், “நான் வல்லமையுள்ளவன் அல்ல! என்னால் இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்ய முடியாது!” என்று கூறினான்.
அதற்கு எலிசா, “நீ ஆராம் நாட்டின் அரசனாவாய் என்று கர்த்தர் என்னிடம் காட்டிக்கொண்டிருக்கிறார்” என்றான்.
௧௪ பிறகு ஆசகேல் எலிசாவிடமிருந்து கிளம்பி அரசனிடம் போக, அவன் இவனிடம், “எலிசா உன்னிடம் என்ன சொன்னார்?” என்று கேட்டான்.
ஆசகேல், “நீர் பிழைப்பீர் என்று எலிசா சொன்னார்” என்றான்.
ஆசகேல் பெனாதாத்தைக் கொலை செய்கிறான்
௧௫ ஆனால் மறுநாள், ஆசகேல் ஒரு போர்வையை எடுத்து தண்ணீரில் நனைத்து அதனை பெனாதாத்தின் முகத்தில் மூடினான். மூச்சை நிறுத்தினான். பெனாதாத் மரித்துப்போனான். எனவே ஆசகேல் புதிய அரசன் ஆனான்.
யோராம் ஆளத்தொடங்குகிறான்
௧௬ யூதாவில் யோசபாத்தின் மகனான யோராம் அரசனாக இருந்தான். இவனது ஐந்தாம் ஆட்சியாண்டில் ஆகாபின் மகனான யோராம் அரசனாக இருந்தபோது அவன் ஆளத் தொடங்கினான். ௧௭ யோராம் ஆளத் துவங்கும்போது அவனுக்கு 32 வயது. எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். ௧௮ ஆனால், அவன் இஸ்ரவேலின் அரசர்களைப் போன்றே கர்த்தருக்குப் பிடிக்காதப் பாவங்களைச் செய்து வந்தான். அவனது மனைவி ஆகாபின் மகளானதால் யோராம் ஆகாபின் குடும்பத்தவர்களைப் போன்றே வாழ்ந்து வந்தான். ௧௯ ஆனால் தன் வேலையாள் தாவீதிற்கு கர்த்தர் சத்தியம் செய்து கொடுத்திருந்ததால் யூதாவை அழிக்கமாட்டார். அவர் ஏற்கெனவே தாவீதின் குடும்பத்தில் உள்ளவனே அரசனாக எப்பொழுதும் இருப்பான் என்று ஆணையிட்டுள்ளார்.
௨௦ யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்து ஏதோம் கலகம் செய்ததால் உடைந்துவிட்டது, அவர்கள் தங்களுக்குரிய அரசனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
௨௧ அதனால் யோராம் (யூதாவைச் சேர்ந்தவன்) இரதங்களோடு சாயீருக்குப் போனான். அவர்களை ஏதோமிய படை சூழ்ந்தபோது, யோராமும் அவனது தளபதிகளும் ஏதோமியர்களைத் தாக்கினார்கள். யோராமின் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குத் தப்பிச் சென்றார்கள். ௨௨ எனவே ஏதோம் யூதாவின் ஆட்சியிலிருந்து (கலகத்தால்) உடைந்துவிட்டது. இன்றுவரை அவர்கள் சுதந்திரமாகவே உள்ளனர்.
அப்போது, லிப்னாத்தும் யூதாவின் ஆட்சியில் இருந்து பிரிந்தது.
௨௩ யோராம் செய்த மற்ற செயல்களும் அவன் செய்த அனைத்தும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
௨௪ இவன் மரித்தப்போது இவனை தாவீது நகரத்தில் முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். அவனது மகன் அகசியா அரசனானான்.
அகசியா தனது ஆட்சியைத் தொடங்குகிறான்
௨௫ யோராமின் மகனான அகசியா யூதாவின் அரசனானான். அப்போது, இஸ்ரவேலில் ஆகாபின் மகனான யோராம் 12வது ஆட்சியாண்டில் இருந்தான். ௨௬ அகசியாவிற்கு அவன் ஆளவந்தபோது 22 வயது. ஓராண்டு எருசலேமில் ஆண்டான். அவன் தாயின் பெயர் அத்தாலியாள். அவள் இஸ்ரவேலின் ஓம்ரி அரசனின் மகள். ௨௭ தவறு என்று கர்த்தர் குறிப்பிட்ட செயல்களையே அவனும் செய்தான். ஆகாபின் குடும்பத்தவர்களைப்போன்றே ஆண்டான். ஏனெனில் அவன் ஆகாபின் மருமகன்.
ஆசகேலுக்கு எதிரான போரில் யோராம் புண்பட்டது
௨௮ யோராம் ஆகாபின் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆராமிய அரசனான ஆசகேலோடு ராமோத் கீலேயாத்தில் போரிடுவதற்காக அகசியா யோராமுடன் சென்றான். ராமோத் கீலேயாத்தில் ஆராமியர்கள் யோராமைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள். ௨௯ அரசனான யோராம் இஸ்ரவேலுக்குத் திருமபித் தன்னைக் காயங்களிலிருந்து குணப்படுத்திக் கொள்ள யெஸ்ரயேல் பகுதிக்குச் சென்றான். யோராமின் மகனான அகசியா யூதாவின் அரசனாயிருந்தான். அகசியா யோராமைக்காண யெஸ்ரயேலுக்குச் சென்றான்.