௭
௧ எலிசா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! அவர், ‘நாளை இதே நேரத்தில், உணவு பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கும். அவற்றின் விலை மலிவாக இருக்கும். சமாரியாவின் வாசல் அருகிலுள்ள சந்தையில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் ஒருவனால் வாங்கமுடியும்’ என்று கூறுகிறார்” என்றான்.
௨ பிறகு அரசனுக்கு நெருக்கமான அதிகாரி தேவ மனிதனை நோக்கி, “கர்த்தர் பரலோகத்திலே ஜன்னல் அமைத்தாலும், இதுபோல் நடக்காது” என்று சொன்னான்.
எலிசா, “உனது கண்களால் காண்பாய். ஆனால் அந்த உணவை நீ உண்ணமாட்டாய்” என்றான்.
ஆராமிய முகாம் காலியானதைக் கண்டுபிடித்த தொழுநோயாளிகள்
௩ நகர வாசலருகில் நான்கு தொழு நோயாளிகள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணத்தை எதிர் பார்த்து ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்? ௪ சமாரியாவில் உண்ண உணவில்லை. நகரத்திற்குள் போனால் நாம் மரித்துப்போவாம். இங்கிருந்தாலும் மரித்துப்போவோம். எனவே ஆராமிய படைக்குச் செல்வோம். அவர்கள் வாழவைத்தால் வாழ்வோம், கொல்ல நினைத்தால் மரித்துப்போவோம்” என்றனர்.
௫ எனவே அன்று மாலையில் அவர்கள் ஆராமியர்களின் முகாமிற்கு அருகில் சென்றார்கள். முகாமின் விளிம்புவரைக்கும் சென்றார்கள். அங்கு யாருமே இல்லை எனக் கண்டார்கள்! ௬ ஆராமிய வீரர்களின் காதுகளில் வீரர்கள், குதிரைகள், இரதங்கள், ஆகியவற்றின் ஓசையைக் கேட்கும்படி கர்த்தர் செய்தார். அவர்கள் தமக்குள், “ஏத்திய மற்றும் எகிப்திய அரசர்களின் துணையுடன் இஸ்ரவேல் அரசன் நம்மோடு போர் செய்யவருகிறான்!” என்று பேசிக் கொண்டனர்.
௭ அதனால் அவர்கள் (பயந்து) அன்று மாலையே ஓடிவிட்டனர். அப்போது கூடாரங்கள், குதிரைகள், கழுதைகள் முகாமில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் தம் உயிருக்காக ஓடிவிட்டனர்.
பகை முகாம்களில் தொழுநோயாளிகள்
௮ முகாம் தொடங்கும் இடத்திற்கு வந்தடைந்த தொழுநோயாளிகள், காலியாக இருந்த கூடாரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் நன்றாக உண்டு குடித்தனர். பின் அவர்கள் தங்கம், வெள்ளி, துணி போன்றவற்றை அள்ளிக்கொண்டு வந்தனர். வெளியே கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் இன்னொரு கூடாரத்திற்குள் நுழைந்தனர். அங்குள்ள பொருட்களையும் எடுத்துப் போய் ஒளித்து வைத்தனர். ௯ பிறகு அவர்கள் தங்களுக்குள், “நாம் தவறு செய்கிறோம்! இன்று நம்மிடம் நல்ல செய்தி உள்ளது. ஆனால் அமைதியாக இருக்கிறோம். விடியும்வரை இவ்வாறு இருந்தால் தண்டிக்கப்படுவோம். எனவே இப்போது அரசனுடைய வீட்டில் இருக்கிற ஜனங்களிடம் சொல்வோம்” என்று சொல்லிக்கொண்டனர்.
தொழுநோயாளிகள் சொன்ன நற்செய்தி
௧௦ எனவே தொழுநோயாளிகள் வந்து வாயில் காவலரை அழைத்தனர். அவர்களிடம், “நாங்கள் ஆராமியர்களின் முகாமிற்குச் சென்றோம். அங்கே மனிதர்களும் யாரும் இல்லை. குதிரைகளும் கழுதைகளும் கட்டப்பட்டுள்ளன. கூடாரங்களும் அங்கு உள்ளன. ஆனால் மனிதர்கள் யாரும் இல்லை” என்றனர்.
௧௧ பிறகு நகரவாயில் காப்போர்கள் சத்தமிட்டு அரண்மனையில் உள்ளவர்களிடம் சொன்னார்கள். ௧௨ அது இரவு நேரம், ஆனால் அரசன் படுக்கையிலிருந்து எழுந்து தன் அதிகாரிகளிடம், “ஆராமிய வீரர்கள் நமக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறேன். நமது பட்டினியையும் வறுமையையும் பார்த்து, கூடாரத்தைவிட்டு வயலில் ஒளிந்துக்கொண்டனர். ‘இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தைவிட்டு வெளியே வரும்போது உயிரோடு நாம் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதன் பிறகு நகருக்குள் நுழையலாம்’ என்று இருக்கிறார்கள்” என்று சொன்னான்.
௧௩ ஒரு அதிகாரியோ, “சிலர் 5 குதிரைகளைக் கொண்டுபோக அனுமதி வழங்குங்கள். அவை எப்படியாவது இங்கு மரித்துப் போகும். இவை ஜனங்களைப் போலவே பட்டினியாக உள்ளன. அவற்றை அனுப்பிப் பார்ப்போம்” என்றான்.
௧௪ எனவே ஜனங்கள் இரண்டு இரதங்களைக் குதிரையோடு தயார் செய்தனர். அரசன் அவர்களை ஆராமியப் படையை நோக்கி அனுப்பினான். அரசன் அவர்களிடம், “என்ன நடக்கிறது என்று போய் பாருங்கள்” என்றான்.
௧௫ அவர்கள் ஆராமியர்களைத் தொடர்ந்து யோர்தான் ஆறுவரைக்கும் சென்றார்கள். வரும் வழியெல்லாம் ஆடைகளும் ஆயுதங்களும் கிடந்தன. அவை வீரர்கள் ஓடும்போது எறிந்தவை. தூதர்கள் அரசனிடம் திரும்பி வந்து இவற்றைக் கூறினார்கள்.
௧௬ பிறகு ஜனங்கள் கூடாரங்களுக்கு ஓடிப் போய் அங்குள்ள பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவந்தனர். எனவே இது கர்த்தர் சொன்னது போலானது. ஒருவனால் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்க முடிந்தது.
௧௭ அரசனின் அரச ஆணைப்படி காவலுக்கு நெருக்கமான அதிகாரி வாசலில் இருந்தான். ஜனங்கள் கூடாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அவனைத் தள்ளி மிதித்துவிட்டு ஓடியதால் கொல்லப்பட்டான். அரசன் அவரது வீட்டிற்கு போனபோது, தேவமனிதர் (எலிசா) சொன்னது போலவே எல்லாம் நடந்தது. ௧௮ எலிசா, “சமாரியாவின் நகர வாசலுக்கருகில் உள்ள சந்தையில் ஒருவன் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்கமுடியும்” என்று சொல்லியிருந்தான். ௧௯ ஆனால் அந்த அதிகாரி அவனுக்கு, “பரலோகத்தின் ஜன்னல்கள் திறந்தாலும் அது சாத்தியமில்லை!” என்று பதில் சொல்ல, எலிசா, “இதனை நீ உன் கண்களால் காண்பாய், ஆனால் அந்த உணவை உன்னால் உண்ண முடியாது” என்றான். ௨௦ அந்த அதிகாரிக்கும் அது அவ்வாறே நடந்தது. ஜனங்கள் நகரவாசலில் அவனைத் தள்ளி, அவன் மீதே நடந்து சென்றார்கள். அவனும் செத்துப்போனான்.