அத்தியாயம்– ௩௩
ஆசரிப்புக்கூடாரம்
௧ கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த மக்களும் இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன்னுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குப் போங்கள். ௨ நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியர்களையும், எமோரியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும் ஏவியர்களையும், எபூசியர்களையும் துரத்திவிடுவேன். ௩ ஆனாலும், வழியிலே நான் உங்களை அழிக்காதபடி, நான் உங்களிடம் வரமாட்டேன், நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள் என்றார். ௪ துக்கமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, ஒருவரும் தங்களுடைய ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். ௫ ஏனென்றால், நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள், நான் ஒரு நிமிடத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை அழிப்பேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதைக்குறித்துத் தீர்மானிப்பேன் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடு சொல்லியிருந்தார். ௬ ஆகையால், இஸ்ரவேலர்கள் ஓரேப் மலை அருகே தங்களுடைய ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
௭ மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். கர்த்தரைத்தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள். ௮ மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ௯ மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடு பேசினார். ௧௦ மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப் பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள். ௧௧ ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான்.
மோசேயும் கர்த்தருடைய மகிமையும்
௧௨ மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு; ௧௩ உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும் என்றான். ௧௪ அதற்கு அவர்: என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். ௧௫ அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும். ௧௬ எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.
௧௭ அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார். ௧௮ அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான். ௧௯ அதற்கு அவர்: என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி, ௨௦ நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது என்றார். ௨௧ பின்னும் கர்த்தர்: இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. ௨௨ என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்; ௨௩ பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது என்றார்.