சங்கீதம்– ௩௦
ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல்
௧ கர்த்தாவே, என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். ௨ என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். ௩ கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். ௪ கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைப் புகழ்ந்துபாடி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள். ௫ ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; மாலையில் அழுகை வரும், அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும். ௬ நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன். ௭ கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்; ௮ நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ? ௯ கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாக இரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி; ௧௦ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன். ௧௧ என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர். ௧௨ என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.