அத்தியாயம்– ௨௬
யோபுவின் வார்த்தைகள்
௧ யோபு மறுமொழியாக: ௨ பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? ௩ நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்? ௪ யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது? ௫ தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. ௬ அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. ௭ அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். ௮ அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. ௯ அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். ௧௦ அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். ௧௧ அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். ௧௨ அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். ௧௩ தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. ௧௪ இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.