அத்தியாயம்– ௧௮
கொரிந்து பட்டணத்தில் பவுல்
௧ அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து; ௨ யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான். ௩ அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான். ௪ ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான். ௫ மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான். ௬ அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தபழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி, ௭ அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது. ௮ ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். ௯ இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே; ௧௦ நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார். ௧௧ அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான். ௧௨ கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்: ௧௩ இவன் வேதப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள். ௧௪ பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாக அல்லது பொல்லாத செயலாக இருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது. ௧௫ ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, ௧௬ அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான். ௧௭ அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
ஆக்கில்லா, பிரிஸ்கில்லா மற்றும் அப்பொல்லோ
௧௮ பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள். ௧௯ அவன் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே அவர்களைவிட்டுப் பிரிந்து, ஜெப ஆலயத்திற்குச் சென்று, யூதர்களுடனே பேசிக்கொண்டிருந்தான். ௨௦ அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல், ௨௧ வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு, ௨௨ செசரியா பட்டணத்திற்கு வந்து, எருசலேமுக்குப்போய், சபைமக்களைச் சந்தித்து, அந்தியோகியாவிற்குப் போனான். ௨௩ அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.
அப்பொல்லோவின் பிரசங்கம்
௨௪ அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான். ௨௫ அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான். ௨௬ அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள். ௨௭ பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். ௨௮ அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.