அத்தியாயம்– ௧௩
பவுலின் இறுதி எச்சரிக்கை
௧ மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும். ௨ நான் இரண்டாம்முறை உங்களோடு இருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரத்தில் இருந்தும் உங்களிடம் இருக்கிறவனாக, நான் மீண்டும் வந்தால் தப்பவிடமாட்டேன் என்று முன்பு பாவம் செய்தவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன். ௩ கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு ஆதாரம் தேடுகிறீர்களே; அவர் உங்களிடம் பலவீனராக அல்ல, உங்களிடம் வல்லவராக இருக்கிறார். ௪ ஏனென்றால், அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராக இருந்தும், உங்களிடம் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவரோடு பிழைத்திருப்போம். ௫ நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது. ௬ நாங்களோ பரீட்சைக்கு நிற்காதவர்கள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ௭ மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாமல் இருக்கும்படியாக, தேவனை நோக்கி வேண்டுதல்செய்கிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்கள் என்று தெரிவதற்காக இல்லை, நாங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்கள்போல இருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்படியே வேண்டுதல்செய்கிறேன். ௮ சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல், சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும். ௯ நாங்கள் பலவீனமுள்ளவர்களும் நீங்கள் பலமுள்ளவர்களாகவும் இருக்கும்போது சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் பூரணர்களாகும்படி வேண்டுதல்செய்கிறோம். ௧௦ ஆகவே, இடித்துப்போடுவதற்கு அல்ல, உறுதியாகக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடம் வரும்போது, உங்களைக் கண்டிக்காமல் இருப்பதற்காக, நான் தூரத்தில் இருக்கும்போதே இவைகளை எழுதுகிறேன்.
இறுதி வாழ்த்துக்கள்.
௧௧ கடைசியாக, சகோதரர்களே, சந்தோஷமாக இருங்கள், பூரணராக நாடுங்கள், ஆறுதல் அடையுங்கள்; ஒரே சிந்தையாக இருங்கள், சமாதானமாக இருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்திற்கும் காரணராகிய தேவன் உங்களோடு இருப்பார். ௧௨ ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். ௧௩ பரிசுத்தவான்கள் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ௧௪ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.