அத்தியாயம்– ௩௨
சனகெரிப் எருசலேமைப் பயமுறுத்துதல்
௧ இந்தக்காரியங்கள் நிறைவேறிவரும்போது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, பாதுகாப்பான பட்டணங்களுக்கு எதிராக முகாமிட்டு, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான். ௨ சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் போர்செய்யத் திட்டமிட்டிருப்பதை எசேக்கியா கண்டபோது, ௩ நகரத்திற்கு வெளியே இருக்கிற ஊற்றுகளை அடைத்துவிட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைசெய்தான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள். ௪ அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி, அநேகம் மக்கள் கூடி, அனைத்து ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் அடைத்துப்போட்டார்கள். ௫ அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதில்களையும் கோபுரங்கள் வரை உயர்த்தி, தாவீதின் நகரத்தினுடைய கோட்டையைப் பலப்படுத்த, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்செய்து, ௬ மக்களின்மேல் படைத்தலைவரை ஏற்படுத்தி, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னருகில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: ௭ நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம். ௮ அவனோடு இருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய போர்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
௯ இதன்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழு படையுடன் லாகீசுக்கு எதிராக முற்றுகை போட்டிருக்கும்போது, யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்திற்கும், எருசலேமிலுள்ள யூதா மக்கள் அனைவரிடத்திற்கும் தன் வேலைக்காரர்களை அனுப்பி: ௧௦ அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றுகை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருப்பதற்கு, நீங்கள் எதன்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்? ௧௧ நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தாலும் சாகும்படி உங்களுக்குப் போதிக்கிறான் அல்லவா? ௧௨ அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியர்களுக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா? ௧௩ நானும் என் முன்னோர்களும் தேசத்து சகல மக்களுக்கும் செய்ததை அறியவில்லையா? அந்த தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ? ௧௪ என் முன்னோர்கள் பாழாக்கின அந்த மக்களுடைய அனைத்து தெய்வங்களிலும் எவன் தன் மக்களை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்? அப்படியிருக்க, உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கமுடியுமா? ௧௫ இப்போதும் எசேக்கியா உங்களை ஏமாற்றவும், இப்படி உங்களுக்கு போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த மக்களின் தெய்வமும், எந்த ராஜ்யத்தின் தெய்வமும் தன் மக்களை என் கைக்கும் என் முன்னோர்களின் கைக்கும் தப்புவிக்க முடியாமல் இருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி, ௧௬ அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள். ௧௭ தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் தங்கள் மக்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் மக்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அவமதிக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் கடிதங்களையும் எழுதினான். ௧௮ அவர்கள் மதிலின்மேலிருக்கிற எருசலேமின் மக்களைப் பயப்படுத்தி, கலங்கச்செய்து, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூத மொழியிலே மகா சத்தமாகக் கூப்பிட்டு, ௧௯ மனிதர்கள் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூமியிலுள்ள மக்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தெய்வங்களைக்குறித்துப் பேசுகிறதுபோல எருசலேமின் தேவனையும்குறித்துப் பேசினார்கள். ௨௦ இதனால் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தனை செய்து, வானத்தை நோக்கி முறையிட்டார்கள். ௨௧ அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள். ௨௨ இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிமக்களையும் அசீரியருடைய ராஜாவாகிய. சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லோருடைய கைக்கும் விலக்கிக் காப்பாற்றி, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார். ௨௩ அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு விலையுயர்ந்த பொருட்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிறகு சகல மக்களின் பார்வைக்கும் மதிக்கப்பட்டவனாயிருந்தான்.
எசேக்கியாவின் பெருமை மற்றும் அவனுடைய வெற்றியும் மரணமும்
௨௪ அந்த நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணமடையும்தருவாயில் இருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்செய்யும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்செய்து, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார். ௨௫ எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உதவிக்குத் தகுந்தவாறு நடக்காமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் வந்தது. ௨௬ எசேக்கியாவின் மனமேட்டிமையினினால் அவனும் எருசலேமின் மக்களும் தங்களைத் தாழ்த்தினதால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை. ௨௭ எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும், ௨௮ தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சைரசமும் எண்ணெயும் வைக்கும்படியான சேமிப்பு அறைகளையும், அனைத்துவிதமான மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான். ௨௯ அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டி ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகா திரளான செல்வத்தைக் கொடுத்தார். ௩௦ இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதன் தண்ணீரை மேற்கேயிருந்து கீழே தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது. ௩௧ ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் பிரதிநிதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்திற்கு அனுப்பப்பட்ட காரியத்தில் அவன் இருதயத்தில் இருக்கிற எல்லாவற்றையும் அறிவதற்காக அவனைச் சோதிப்பதற்கு தேவன் அவனைக் கைவிட்டார். ௩௨ எசேக்கியாவின் மற்ற காரியங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. ௩௩ எசேக்கியா இறந்தபின்பு, அவனை தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் முக்கியமான கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; யூதா முழுவதும், எருசலேமின் மக்களும் அவன் இறந்தபோது அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள்; அவன் மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.