அத்தியாயம்– ௨௪
ஆசாரியர்களின் பிரிவுகள்
௧ ஆரோன் சந்ததிகளின் பிரிவுகளாவன: ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள். ௨ நாதாபும், அபியூவும் மகன்கள் இல்லாமல் தங்களுடைய தகப்பனுக்கு முன்னே இறந்ததால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள். ௩ தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் சந்ததிகளையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் சந்ததிகளையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்திற்கு முறைப்படி அவர்களைப் பிரித்தான். ௪ அவர்களைப் பிரிக்கிறபோது, இத்தாமாரின் சந்ததிகளைவிட எலெயாசாரின் சந்ததிகளுக்குள்ளே தலைவர்கள் அதிகமானபேர் இருந்ததால், எலெயாசாரின் மகன்களில் பதினாறுபேர் தங்களுடைய பிதாக்களுடைய குடும்பத்திற்கும், இத்தாமாரின் மகன்களில் எட்டுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்திற்கும் தலைவர்களாக வைக்கப்பட்டார்கள். ௫ எலெயாசாரின் சந்ததியாரிலும் இத்தாமாரின் சந்ததியாரிலும், பரிசுத்த இடத்திற்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாக இருக்கும்படி, இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்செய்யாமல் சீட்டுப்போட்டு அவர்களைப் பிரித்தார்கள். ௬ லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது. ௭ முதலாவது சீட்டு யோயாரீபிற்கும், இரண்டாவது யெதாயாவிற்கும், ௮ மூன்றாவது ஆரிமிற்கும், நான்காவது செயோரீமிற்கும், ௯ ஐந்தாவது மல்கியாவிற்கும், ஆறாவது மியாமீனிற்கும், ௧௦ ஏழாவது அக்கோத்சிற்கும், எட்டாவது அபியாவிற்கும், ௧௧ ஒன்பதாவது யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும், ௧௨ பதினோராவது எலியாசீபிற்கும், பன்னிரெண்டாவது யாக்கீமிற்கும், ௧௩ பதின்மூன்றாவது உப்பாவிற்கும், பதினான்காவது எசெபெயாபிற்கும், ௧௪ பதினைந்தாவது பில்காவிற்கும், பதினாறாவது இம்மேரிற்கும், ௧௫ பதினேழாவது ஏசீரிற்கும், பதினெட்டாவது அப்சேசிற்கும், ௧௬ பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும், ௧௭ இருபத்தோராவது யாகினிற்கும், இருபத்திரண்டாவது காமுவேலிற்கும், ௧௮ இருபத்துமூன்றாவது தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தது. ௧௯ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்படி, தங்கள் செயல்முறை வரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையும் அவர்களுடைய ஊழியத்திற்காகச் செய்யப்பட்ட வகுப்புகள் இவைகளே.
மீதமுள்ள லேவியர்கள்
௨௦ லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும், ௨௧ ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும், ௨௨ இத்சாரியர்களில் செலெமோத்தும், செலெமோத்தின் சந்ததியில் யாகாத்தும், ௨௩ எப்ரோனின் சந்ததியில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் மகனாகிய அம்ரியாவும், மூன்றாம் மகனாகிய யாகாசியேலும், நான்காம் மகனாகிய எக்காமியாமும், ௨௪ ஊசியேலின் சந்ததியில் மீகாவும், மீகாவின் சந்ததியில் சாமீரும், ௨௫ மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் மகன்களில் சகரியாவும், ௨௬ மெராரியின் சந்ததியில் மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் சந்ததியில் பேனோவும், ௨௭ மெராரியின் சந்ததியில் யாசியாவின் சந்ததியில் பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும், ௨௮ மகேலியின் சந்ததியில் மகன்களில்லாத எலெயாசாரும், ௨௯ கீசின் சந்ததியில் யெராமியேலும், ௩௦ மூசியின் சந்ததியில் மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே. ௩௧ இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் குடும்பத் தலைவர்களாக இருக்கிற தலைவர்களுக்கும் முன்பாக, தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் சந்ததி செய்ததுபோல, தங்களில் இருக்கிற குடும்பத் தலைவர்களான தலைவர்களுக்கும், அவர்களுடைய சிறிய சகோதரர்களுக்கும் சரிசமமாக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.