௨
தேவன் ஜனங்களிடம் தமது வாழ்வை மாற்றும்படி கேட்கிறார்
௧ வெட்கமற்ற ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை, ௨ நீங்கள் உதிர்ந்த பூக்களைப் போன்று வாடும் முன்னால் மாற்றுங்கள். பகலின் வெப்பத்தால் பூவானது வாடி உதிரும். நீயும் அதைப்போன்று கர்த்தர் கோபத்தைக் காட்டும்போது ஆவாய். எனவே கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள் மீது வரும் முன்னே உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். ௩ பணிவான ஜனங்களே, அனைவரும் கர்த்தரிடம் வாருங்கள். அவருடைய சட்டங்களுக்கு அடி பணியுங்கள். நல்லவற்றைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். பணிவாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதனால் ஒரு வேளை நீங்கள் கர்த்தர் தனது கோபத்தைக் காட்டும்போது பாதுகாப்பு பெறலாம்.
இஸ்ரவேலின் அண்டை நாட்டினரைக் கர்த்தர் தண்டிப்பார்
௪ காத்சாவில் எவரும் விடுபடமாட்டார்கள். அஸ்கலோன் அழிக்கப்படும். அஸ்தோத்தை விட்டுப் போகும்படி மதியத்திற்குள் பலவந்தப்படுத்த ப்படுவார்கள். எக்ரோன் காலியாகும். ௫ பெலிஸ்தரின் தேச ஜனங்களே, கடற்கரையில் வாழும் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தி உங்களுக்குரியது. கானான் தேசமே, பெலிஸ்தரின் தேசமே, நீங்கள் அழிக்கப்படுவீர்கள். அங்கே எவரும் வாழமாட்டார்கள். ௬ கடற்கரையில் உள்ள உங்கள் நிலங்கள் மேய்ப்பர்களுக்கும், ஆடுகளுக்கும் தங்கும் இடங்களாகும். ௭ பிறகு அந்த தேசம் யூதாவிலிருந்துத் தப்பிப் பிழைத்தவர்களுக்கு உரியதாகும். கர்த்தர் அந்த யூதாவிலுள்ள ஜனங்களை நினைவில் வைத்திருப்பார். அந்த ஜனங்கள் அயல்நாடுகளில் கைதிகளாக இருப்பார்கள். ஆனால் கர்த்தர் அவர்களைத் திரும்ப அழைத்து வருவார். பிறகு யூதா ஜனங்கள் தமது ஆடுகளை அவ்வயல்களில் உள்ள புல்லை மேயச்செய்வார்கள். மாலை நேரங்களில் அவர்கள் அஸ்கலோனின் காலியான வீடுகளில் படுத்துக்கொள்வார்கள்.
௮ கர்த்தர் கூறுகின்றார்: “மோவாப் ஜனங்களும், ஆமோன் ஜனங்களும் என்ன செய்தனர் என்று எனக்குத் தெரியும். அந்த ஜனங்கள் எனது ஜனங்களை நிந்தைக்குள்ளாக்கினார்கள். அந்த ஜனங்கள் தம் சொந்த நாட்டைப் பொரிதாக்க இத்தேசத்தை எடுத்துக் கொண்டார்கள். ௯ எனவே, நான் வாழ்வது எவ்வளவு உறுதியோ அவ்வாறே, மோவாப் மற்றும் ஆமோனின் ஜனங்கள், சோதோம் மற்றும் கொமோராவைப்போல அழிக்கப்படுவார்கள். நான் சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனைாகிய கர்த்தர். நான் அந்நாடுகள் எல்லாம் என்றென்றைக்கும் முழுமையாக அழிக்கப்படுமென்று வாக்குறுதி அளிக்கிறேன். அவர்களது நிலத்தில் முட்செடிகள் வளரும். அவர்களது நிலமானது சவக்கடலினால் உப்பாக்கப்பட்ட நிலம் போன்றிருக்கும். எனது ஜனங்களில் மீதியாக இருப்பவர்கள் அந்த நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.”
௧௦ மோவாப் மற்றும் அம்மோன் ஜனங்களுக்கு அவை நிகழும். ஏனென்றால், அவர்கள் பெருமைமிக்கவர்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஜனங்களைக் கொடுமைப்படுத்தி, அவமானமடையவும், வெட்கமடையவும் செய்தார்கள். ௧௧ அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அஞ்சுவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்களது தெய்வங்களை அழிப்பார். பிறகு தூரதேசங்களில் உள்ள ஜனங்கள் அனைவரும் கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள். ௧௨ எத்தியோப்பியா ஜனங்களே, இது உங்களுக்கும் பொருந்தும். கர்த்தருடைய பட்டயம் உமது ஜனங்களையும் கொல்லும். ௧௩ கர்த்தர் வடக்கே திரும்பி அசீரியாவையும் தண்டிப்பார். அவர் நினிவேயையும் அழிப்பார். அந்நகரமானது காலியான வறண்ட பாலைவனம் போலாகும். ௧௪ பிறகு அந்த அழிந்த நகரத்தில் ஆடுகளும், காட்டு மிருகங்களும் மட்டுமே வாழும். விட்டுப்போன தூண்களின்மேல் கோட்டான்களும், நாரைகளும் இருக்கும். அவர்களின் கூக்குரல் ஜன்னல் வழியாக வந்து கேட்கப்படும். வாசல் படிகளில் காகங்கள் இருக்கும். கருப்பு பறவைகள் காலியான வீடுகளில் இருக்கும். ௧௫ இப்பொழுது நினிவே மிகவும் பெருமிதமாக உள்ளது. இது அத்தகைய மகிழ்ச்சிகரமான நகரம். ஜனங்கள் தாம் பாதுகாப்புடன் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் நினிவேதான் உலகத்திலேயே மிகச் சிறந்த இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்நகரம் அழிக்கபடும். இது காலியான இடமாகி காட்டு மிருகங்கள் மட்டுமே ஓய்வெடுக்கச் செல்லும். ஜனங்கள் அந்த வழியாகக் கடந்து செல்லும்போது அதைப் பார்த்து பரிகசிப்பார்கள். அந்நகரம் எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி தங்கள் தலையை குலுக்குவார்கள்.