௫௯
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கெல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.
௧ தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும்.
௨ தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
௩ பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை.
௪ அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை.
கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும்.
௫ நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும்.
அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.
 
௬ அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து
ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள்.
௭ அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும்.
அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள்.
அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
 
௮ கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும்.
அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்.
௯ தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன்.
தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர்.
௧௦ தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார்.
என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.
௧௧ தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள்.
என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும்.
௧௨ அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர்.
அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும்.
அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
௧௩ உமது கோபத்தில் அவர்களை அழியும்.
அவர்களை முற்றிலுமாக அழியும்!
யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும்,
தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்!
 
௧௪ ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர்.
௧௫ அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை.
அவர்களுக்கு உறங்க இடமும் இராது.
௧௬ ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன்.
ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம்.
௧௭ உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
நீரே என்னை நேசிக்கும் தேவன்.