௩௧
லேமுவேல் என்னும் அரசனது ஞானமொழிகள்
௧ இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞான மொழிகள். இவற்றை அவனது தாய் அவனுக்குக் கற்பித்தாள்.
௨ ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன். ௩ உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் அரசர்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே. ௪ லேவமுவேலே, அரசர்கள் மதுவைக் குடிப்பது அறிவுள்ள செயல் அல்ல. ஆளுபவர்கள் மதுவை விரும்புவது அறிவுடையது அல்ல. ௫ அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும். ௬ ஏழை ஜனங்களுக்கு மதுவைக் கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக் கொடு. ௭ பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும்.
௮ ஒருவன் தனக்குத்தானே உதவிக்கொள்ள முடியாவிட்டால், நீ அவனுக்கு உதவவேண்டும். எவனால் பேசமுடியாதோ, அவனுக்காக பேசு. துன்பப்படுகிற அனைத்து ஜனங்களுக்கும் நீ உதவ வேண்டும். ௯ சரியென்று தெரிந்தவற்றின் பக்கம் நில். நேர்மையாக நியாயம்தீர்த்துவிடு. ஏழை ஜனங்களின் உரிமையைக் காப்பாற்று. தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவு.
பரிபூரணமுள்ள மனைவி
௧௦ * வசனங்கள் 10-31 எபிரெய மொழியில், இப்பாடலின் ஒவ்வொரு வசனமும் அகர வரிசையின் அடுத்தடுத்த எழுத்தில் தொடங்கும். இந்தப் பாடல் ஒரு பெண்ணின் அனைத்து நல்ல குணங்களையும் காட்டுகின்றது. “பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம்.
ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள்.
௧௧ அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான்.
அவன் ஒருபோதும் ஏழையாகமாட்டான்.
௧௨ தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள்.
அவனுக்கு ஒருபோதும் துன்பம் உண்டாக்கமாட்டாள்.
௧௩ அவள் எப்பொழுதும் ஆட்டு மயிரையும் சணல்நூலையும் சேகரிப்பாள்.
தனது கைகளினாலேயே ஆடைகளை மகிழ்ச்சியோடு தயாரிப்பாள்.
௧௪ அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப் போன்றவள்.
எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.
௧௫ அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள்.
வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக் கொடுப்பாள்.
௧௬ அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள்.
அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக் கொடிகளை நடுவாள்.
௧௭ அவள் கடினமாக உழைப்பாள்.
அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.
௧௮ தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள்.
அவள் இரவில் அதிக நேரம் வேலைச் செய்த பிறகே ஓய்வெடுக்கிறாள்.
௧௯ அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள்.
தனக்குத் தேவையான ஆடைகளைத் தானே நெய்கிறாள்.
௨௦ ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள்.
தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள்.
௨௧ பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டாள்.
ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள்.
௨௨ அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள்.
மிக அழகான புடவையை அணிகிறாள்.
௨௩ ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர்.
அவன் அந்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன்.
௨௪ அவள் ஒரு நல்ல வியாபாரி.
அவள் ஆடைகளையும் கச்சைகளையும் தயாரிக்கிறாள்.
இவற்றை வியாபாரிகளிடம் விற்கிறாள்.
௨௫ அவள் போற்றப்படுவாள்.† அவள் போற்றப்படுவாள் அல்லது “அவள் பலமுள்ள வளாக இருக்கிறாள்.” ஜனங்கள் அவளை மதிக்கின்றனர்.
அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள்.
௨௬ அவள் ஞானத்தோடு பேசுகிறாள்.
ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள்.
௨௭ அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.
தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள்.
௨௮ அவளது குழந்தைகள் அவளைப் பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள்.
அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான்.
௨௯ “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள்.
ஆனால் நீதான் சிறந்தவள்” என்கிறான்.
௩௦ ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம்.
ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள்.
௩௧ அவளுக்குப் பொருத்தமான பரிசைக் கொடு.
எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.