௨௬
இயேசுவைக் கொல்லத் திட்டமிடுதல்
(மாற். 14:1-2; லூ. 22:1-2; யோவான் 11:45-53)
௧ இவை அனைத்தையும் சொல்லி முடித்த இயேசு, தம் சீஷர்களை நோக்கி, ௨ “நாளைக்கு மறுநாள் பஸ்கா பண்டிகை என்பதை அறிவீர்கள். அன்றையதினம் மனிதகுமாரன் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்காக எதிரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்” என்று கூறினார்.
௩ தலைமை ஆசாரியரும் வேதபாரகரும் தலைமை ஆசாரியன் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். தலைமை ஆசாரியனின் பெயர் காய்பா. ௪ அக்கூட்டத்தில் இயேசுவைக் கைது செய்யத்தக்க வழியைத் தேடினார்கள். பொய் கூறி இயேசுவைக் கைது செய்து கொலை செய்ய திட்டமிட்டார்கள். ௫ அக்கூட்டத்தில் இருந்தவர்கள் “பஸ்கா நாளில் நாம் இயேசுவைக் கைதுசெய்ய முடியாது. மக்களுக்குக் கோபமூட்டி அதனால் கலவரம் ஏற்பட நமக்கு விருப்பமில்லை” என்று கூறினார்கள்.
ஒரு பெண்ணின் சிறப்பு செயல்
(மாற். 14:3-9; யோவான் 12:1-8)
௬ இயேசு பெத்தானியாவில் இருந்தார். தொழுநோயாளியான சீமோன் வீட்டிற்கு சென்றிருந்தார். ௭ அப்பொழுது ஒரு பெண் அவரிடம் வந்தாள். அவளிடம் ஒரு வெள்ளைக் கல் ஜாடியில் நிறைய மிக விலையுயர்ந்த வாசனைத் தைலம் இருந்தது. அப்பெண் இயேசுவின் தலைமீது அவ்வாசனைத் தைலத்தை அவர் உணவு அருந்திக்கொண்டிருந்தபொழுது ஊற்றினாள்.
௮ அப்பெண் இவ்வாறு செய்ததைக் கண்ட இயேசுவின் சீஷர்கள் அவள்மீது எரிச்சல் அடைந்தார்கள். “வாசனைத் தைலத்தை ஏன் வீணாக்குகிறாய்? ௯ அதை நல்ல விலைக்கு விற்றால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே?” என்று கடிந்து கொண்டார்கள்.
௧௦ ஆனால் நடந்ததை அறிந்த இயேசு, “இப்பெண்ணை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? இவள் எனக்கு ஒரு நற்செயலைச் செய்திருக்கிறாள். ௧௧ ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். ௧௨ வாசனைத் தைலத்தை என் தலைமீது ஊற்றி இப்பெண் நான் மரித்தப்பின் அடக்கம் செய்வதற்கான ஆயத்தத்தைச் செய்திருக்கிறாள். ௧௩ நான் உண்மையைச் சொல்லுகிறேன், உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்லப்படும். நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இப்பெண் செய்த செயலும் சொல்லப்படும். அப்பொழுது மக்கள் அவளை நினைவுகூர்வார்கள்” என்றார்.
துரோகியான யூதாஸ்
(மாற். 14:10-11; லூ. 22:3-6)
௧௪ யூதா ஸ்காரியோத்து என்று பெயர் கொண்ட இயேசுவின் சீஷர்களில் ஒருவன் தலைமை ஆசாரியனிடம் பேசுவதற்குச் சென்றான். ௧௫ யூதாஸ், “நான் இயேசுவை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதற்கு நீங்கள் எனக்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்டான். தலைமை ஆசாரியர்கள் யூதாஸ்க்கு முப்பது வெள்ளி நாணயங்களைக் கொடுத்தார்கள். ௧௬ அப்பொழுதிலிருந்து, யூதாஸ் ஆசாரியர்களிடம் இயேசுவை ஒப்படைக்கத்தக்க நேரத்திற்குக் காத்திருந்தான்.
பஸ்கா விருந்து
(மாற். 14:21-22; லூ. 22:7-14, 21-23; யோவான் 13:21-30)
௧௭ புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பண்டிகையின் முதல் நாளன்று, சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா விருந்துண்ண உமக்காக ஏற்பாடுகளைச் செய்யக் காத்திருக்கிறோம். எங்கே உணவுக்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
௧௮ அவர்களுக்கு மறுமொழியாக இயேசு, “நகருக்குள் செல்லுங்கள். அங்கே எனக்கு அறிமுகமான ஒருவரிடம் சென்று, போதகர் கூறுவதாகக் கூறுங்கள், ‘குறிக்கப்பட்ட வேளை நெருங்கிவிட்டது. நான் என் சீஷர்களுடன் உன் வீட்டில் பஸ்கா விருந்துண்பேன்’, என்று கூறுங்கள்” என்று கூறினார். ௧௯ இயேசுவின் சீஷர்கள் அவரது சொற்படியே அவர் சொன்னவற்றைச் செய்தார்கள். அவர்கள் பஸ்கா விருந்தைத் தயார் செய்தார்கள்.
௨௦ அன்று மாலை இயேசுவும் அவரது பன்னிரண்டு சீஷர்களும் மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். ௨௧ அப்பொழுது இயேசு கூறினார், “உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவன் விரைவில் என்னை எதிரிகளிடம் பிடித்துக் கொடுப்பான்” என்றார்.
௨௨ அதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். ஒவ்வொரு சீஷரும் இயேசுவிடம், “ஆண்டவரே, நிச்சமாய் அது நானல்ல!” என்றனர்.
௨௩ அதற்கு இயேசு, “நான் கை கழுவும் பாத்திரத்திலேயே கை கழுவுகின்றவனே எனக்கு எதிராவான். ௨௪ மனித குமாரன் இறப்பார். இது நடக்குமென வேதவாக்கியம் சொல்கிறது. மனித குமாரனைக் கொல்வதற்குக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு மிகுந்த தீமை விளையும். அதைவிட அவன் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்” என்றார்.
௨௫ பின் யூதாஸ் இயேசுவிடம், “போதகரே! நான் நிச்சயம் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டேன்!” என்றான். (இயேசுவை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யூதாஸ் தான்) அதற்கு இயேசு, “இல்லை. நீ தான் என்னைக் காட்டிக் கொடுப்பாய்” என்றார்.
கர்த்தரின் இரவு உணவு
(மாற். 14:22-26; லூ. 22:15-20; 1 கொரி. 11:23-25)
௨௬ அவர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த பொழுது, இயேசு சிறிது அப்பத்தைக் கையிலெடுத்தார். அந்த அப்பத்துக்காக தேவனுக்கு நன்றி கூறி அதைப் பங்கிட்டார். அதைத் தம் சீஷர்களுக்கு கொடுத்து, “இந்த அப்பத்தை எடுத்து சாப்பிடுங்கள். இந்த அப்பமே என் சரீரம்” என்று சொன்னார்.
௨௭ பின் இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்து, அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். அதைத் தமது சீஷர்களுக்குக் கொடுத்த இயேசு, “நீங்கள் ஒவ்வொருவரும் இதைக் குடியுங்கள். ௨௮ இந்த திராட்சை இரசம் என் இரத்தம், என் இரத்தத்தின் மூலம் (மரணம்) தேவனுக்கும் மக்களுக்குமான புதிய உடன்படிக்கை துவங்குகிறது. இந்த இரத்தம் பலருக்கும் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்காக அளிக்கப்படுகிறது. ௨௯ நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், அதாவது, நாம் மீண்டும் என் பிதாவின் இராஜ்யத்தில் ஒன்று சேர்ந்து திராட்சை இரசத்தைப் புதியதாய் பானம் பண்ணும்வரைக்கும் நான் இதை அருந்தமாட்டேன்” என்று கூறினார்.
௩௦ சீஷர்கள் அனைவரும் ஒரு பாடலைப் பாடினார்கள். பின்பு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.
சீஷர்கள் பற்றிய முன்னறிவிப்பு
(மாற். 14:27-31; லூ. 22:31-34; யோவான் 13:36-38)
௩௧ இயேசு தம் சீஷர்களிடம், “இன்றிரவு நீங்கள் உங்கள் விசுவாசத்தை என்னிமித்தம் இழப்பீர்கள். வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது:
“ ‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன்.
மந்தையின் ஆடுகள் கலைந்து ஓடும்’ சகரியா 13:7
என்று கூறினார்.
௩௨ ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.
௩௩ அதற்கு பேதுரு, “மற்ற எல்லாச் சீஷர்களும் தங்கள் விசுவாசத்தை இழக்கலாம். ஆனால், ஒரு போதும் என் விசுவாசத்தை இழக்கமாட்டேன்” என்று கூறினான்.
௩௪ அதற்குப் இயேசு, “நான் உண்மையை சொல்லுகிறேன், இன்றிரவு உனக்கு என்னைத் தெரியாது எனக் கூறுவாய். அதுவும் சேவல் கூவுவதற்குமுன் மூன்று முறை சொல்வாய்” என்று கூறினார்.
௩௫ ஆனால், பேதுரு, “உம்மை எனக்குத் தெரியாது எனக் கூறவேமாட்டேன். உம்முடன் சேர்ந்து நானும் இறப்பேன்!” என்றான். மேலும் மற்ற சீஷர்கள் அனைவரும் அவ்வாறே கூறினார்கள்.
இயேசுவின் பிரார்த்தனை
(மாற். 14:32-42; லூ. 22:39-46)
௩௬ பின்பு இயேசு தம் சீஷர்களுடன் கெத்செமனே என்ற இடத்திற்குச் சென்றார். அவர் தம் சீஷர்களிடம், “நான் அங்கே சென்று பிரார்த்தனை செய்யும்வரைக்கும் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்றார். ௩௭ பேதுருவையும், செபதேயுவின் இரு மகன்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார். ௩௮ இயேசு பேதுருவிடமும், செபதேயுவின் இரு மகன்களிடமும் “என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்துள்ளது. என் இதயம் துக்கத்தினால் உடைந்துள்ளது. என்னுடன் இங்கேயே விழித்திருந்து காத்திருங்கள்” என்றார்.
௩௯ பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார், “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார். ௪௦ பிறகு தம் சீஷர்களிடம் இயேசு திரும்பி வந்தார். தம் சீஷர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்ட இயேசு, பேதுருவிடம் கூறினார், “ஒருமணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? ௪௧ சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் ஆவி சரியானதைச் செய்ய விரும்புகிறது. ஆனால் உங்கள் சரீரமோ பலவீனமாக உள்ளது” என்றார்.
௪௨ இயேசு இரண்டாவது முறையாக சென்று பிரார்த்தனை செய்தார், “என் பிதாவே, வேதனை மிகுந்த இக்காரியங்கள் எனக்கு ஏற்படாதிருக்குமாறு செய்ய முடியாதெனில், நீர் விரும்பியபடியே நடக்க நான் வேண்டுகிறேன்” என்றார்.
௪௩ பின்பு இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்றார். மீண்டும் அவர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்டார். அவர்களது கண்கள் மிகவும் களைப்புடன் காணப்பட்டன. ௪௪ ஆகவே மீண்டும் ஒருமுறை இயேசு அவர்களை விட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். மூன்றாவது முறையும் அதையேக் கூறினார்.
௪௫ பின் இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்று அவர்களிடம், “இன்னுமா நீங்கள் தூங்கிக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டுமிருக்கிறீர்கள்? மனித குமாரனைப் பாவிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ௪௬ எழுந்திருங்கள்! நாம் போக வேண்டும். இதோ வந்துவிட்டான் என்னை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் போகிறவன்” என்றார்.
இயேசு கைது செய்யப்படுதல்
(மாற். 14:43-50; லூ. 22:47-53; யோவான் 18:3-12)
௪௭ இப்படிப் பேசிக்கொண்டிருந்தபொழுதே யூதாஸ் அங்கு வந்தான், யூதாஸ் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன். அவனுடன் பலரும் இருந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியனாலும் மூத்த தலைவர்களாலும் அனுப்பப்பட்டவர்கள். யூதாஸூடன் இருந்தவர்கள் அரிவாள்களையும் தடிகளையும் வைத்திருந்தனர். ௪௮ யார் இயேசு என்பதை அவர்களுக்குக் காட்ட யூதாஸ் ஒரு திட்டமிட்டிருந்தான். அவன் அவர்களிடம், “நான் முத்தமிடுகிறவரே இயேசு. அவரைக் கைது செய்யுங்கள்” என்றான். ௪௯ அதன்படி யூதாஸ் இயேசுவிடம் சென்று, “வணக்கம். போதகரே!” என்று கூறி இயேசுவை முத்தமிட்டான்.
௫௦ இயேசு, “நண்பனே, நீ செய்ய வந்த காரியத்தை செய்” என்று கூறினார்.
பின் யூதாஸூடன் வந்த மனிதர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டார்கள். அவரைக் கைது செய்தார்கள். ௫௧ இது நடந்தபொழுது, இயேசுவுடன் இருந்த சீஷர்களில் ஒருவன் தன் அரிவாளை எடுத்தான். அச்சீஷன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரனை அரிவாளால் தாக்கி அவனது காதை வெட்டினான்.
௫௨ இயேசு அச்சீஷனைப் பார்த்து, “அரிவாளை அதன் உறையில் போடு. அரிவாளை எடுப்பவன் அரிவாளாலே சாவான். ௫௩ நான் என் பிதாவைக் கேட்டால் அவர் எனக்கு பன்னிரண்டு தேவ தூதர் படைகளும் அதற்கு அதிகமாகவும் அனுப்புவார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ௫௪ ஆனால் இது இப்படியே வேதவாக்கியங்கள் கூறுகிறபடியே நடக்க வேண்டும்” என்றார்.
௫௫ பின்னர் இயேசு தம்மைப் பிடிக்க வந்தவர்கள் அனைவரையும் நோக்கி, “ஒரு குற்றவாளியைப் போல என்னைப் பிடிக்க அரிவாள் தடிகளுடன் வந்திருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதனை செய்தேன். ஆனால், என்னை அங்கே கைது செய்யவில்லை. ௫௬ தீர்க்கதரிசிகள் எழுதி வைத்துள்ளபடியே இவை அனைத்தும் நடந்துள்ளன” என்று கூறினார். பின்பு இயேசுவின் எல்லா சீஷர்களும் அவரைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள்.
யூதத் தலைவர்கள் முன் இயேசு
(மாற். 14:53-65; லூ. 22:54-55, 63-71; யோவான் 18:13-14, 19-24)
௫௭ இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரை தலைமை ஆசாரியனான காய்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வேதபாரகர்களும் மற்ற யூதத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். ௫௮ இயேசுவைத் தொடர்ந்து வந்த பேதுரு அவர் அருகில் செல்லவில்லை. பேதுரு இயேசுவைத் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் வீட்டு முற்றத்தை அடைந்தான். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண பேதுரு உள்ளே நுழைந்து காவல்காரர்களுடன் அமர்ந்தான்.
௫௯ தலைமை ஆசாரியனும் யூத ஆலோசனைச் சங்கமும் இயேசுவைக் கொல்ல அவரிடம் ஏதேனும் குற்றம் காண முயற்சித்தார்கள். இயேசு தவறு செய்தார் என சொல்லக்கூடிய மக்களைத் தேட முயற்சித்தார்கள். ௬௦ பலரும் வந்து இயேசுவைப் பற்றிப் பொய்யான செய்திகளைக் கூறினர். ஆனாலும் இயேசுவைக் கொல்லத்தக்க காரணம் எதையும் யூத ஆலோசனைச் சங்கம் காணவில்லை. பிறகு இருவர் வந்து, ௬௧ “நான் தேவனின் ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் மீண்டும் அதைக் கட்டுவேன் என்று இவன் (இயேசு) கூறினான்” என்றார்கள்.
௬௨ பின் தலைமை ஆசாரியன் எழுந்திருந்து இயேசுவைப் பார்த்து, “இவர்கள் உமக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள், இவர்கள், உம்மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உம்மிடம் ஏதும் பதில் உள்ளதா? இவர்கள் கூறுவது உண்மையா?” என்று கேட்டார். ௬௩ ஆனால், இயேசு ஏதும் பதில் கூறவில்லை.
மீண்டும் தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நான் உன்னை உறுதி மொழிக்கு உட்படுத்துகிறேன். ஜீவனுள்ள தேவனின் வல்லமையின் பெயரால் ஆணையிடுகிறேன். உண்மையைச் சொல் நீயா தேவகுமாரனாகிய கிறிஸ்து?” என்று கேட்டான்.
௬௪ அதற்கு இயேசு, “ஆம் நான் தான், ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எதிர்காலத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பீர்கள்” என்று விடையளித்தார்.
௬௫ இதைக்கேட்ட தலைமை ஆசாரியன் மிகக் கோபமடைந்தான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “இவன் தேவனுக்கு எதிரானவைகளைப் பேசுகிறான். வேறு சாட்சியம் எதுவும் தேவையில்லை. தேவனுக்கு எதிராக இவன் கூறியவற்றை நீங்கள் எல்லோரும் கேட்டீர்கள். ௬௬ நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று சொன்னான்.
யூதர்கள் அனைவரும், “இவன் குற்றவாளி. இவன் (இறக்க) மரிக்க வேண்டும்” என்றார்கள்.
௬௭ பின் அங்கிருந்தவர்கள் இயேசுவின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். அவரைத் தங்கள் கையால் அடித்தார்கள். மற்றவர்கள் அவரது கன்னத்தில் அறைந்தார்கள். ௬௮ அவர்கள் இயேசுவைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி என்பதைக் காட்டு. கிறிஸ்துவே, உன்னை அடித்தது யார் என்பதைக் கூறு” என்று கேட்டார்கள்.
பேதுருவின் மறுதலிப்பு
(மாற். 14:66-72; லூ. 22:56-62; யோவான் 18:15-18, 25-27)
௬௯ அப்பொழுது, முற்றத்தில் அமர்ந்திருந்த பேதுருவிடம் ஒரு வேலைக்காரப்பெண் வந்து, “கலிலேயாக்காரனான அம்மனிதன் இயேசுவுடன் நீயும் இருந்தாயல்லவா?” எனக் கேட்டாள்.
௭௦ ஆனால் பேதுரு, தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை என அங்கிருந்தவர்களிடம் கூறினான். பேதுரு “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினான்.
௭௧ பின்பு, முற்றத்தை விட்டுச்சென்ற பேதுருவை, வாயிற்கதவருகில் வேறொரு பெண் பார்த்தாள். அங்கிருந்தவர்களிடம் அப்பெண், “நசரேயனாகிய இயேசுவுடன் இருந்தது இவன்தான்” என்று சொன்னாள்.
௭௨ மீண்டும் பேதுரு தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை எனக் கூறினான். “தேவனின் மீது ஆணையாக இம்மனிதன் இயேசுவை எனக்குத் தெரியாது” என பேதுரு கூறினான்.
௭௩ சிறிது நேரம் கழித்து அங்கு நின்றிருந்த சிலர் பேதுருவிடம் சென்று, “இயேசுவின் சீஷர்களில் நீயும் ஒருவன் என்பது எங்களுக்குத் தெரியும். நீ பேசுவதிலிருந்து எங்களுக்கு அது தெரிகிறது” என்று கூறினார்கள்.
௭௪ பின் சாபமிடத் துவங்கிய பேதுரு, “தேவன் மேல் ஆணையாக எனக்கு இயேசுவைத் தெரியாது” என்றான். பேதுரு இதைக் கூறிய பின் சேவல் கூவியது. ௭௫ அப்போது “சேவல் கூவுவதற்குமுன் என்னை உனக்குத் தெரியாது என நீ மூன்று முறை கூறுவாய்” என இயேசு கூறியதைப் பேதுரு ஞாபகப்படுத்திக் கொண்டான். பின்பு வெளியில் சென்ற பேதுரு மிகுந்த மனக் கசப்புடன் அழுதான்.