௨௦
யூத அதிகாரிகளின் கேள்வி
(மத். 21:23-27; மாற். 11:27-33)
௧ ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் இருந்தார். அவர் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு மக்களுக்குக் கூறினார். தலைமை ஆசாரியரும், வேதபாரகரும், முதிய யூத அதிகாரிகளும் இயேசுவிடம் பேசுவதற்கு வந்தனர். ௨ அவர்கள், “இக்காரியங்களைச் செய்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தவர் யார்?” என்றார்கள்.
௩ இயேசு பதிலாக, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்பேன். ௪ மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
௫ ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “ ‘யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது’ என்று நாம் பதில் சொன்னால் அவர், ‘அப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை?’ என்பார். ௬ ஆனால் நாம், ‘யோவானின் ஞானஸ்நானம் மனிதரிடம் இருந்து வந்தது’ என்றுக் கூறினால் எல்லா மக்களும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பதால் நம்மைக் கொல்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். ௭ எனவே அவர்கள், “எங்களுக்கு விடை தெரியவில்லை” என்று பதில் சொன்னார்கள்.
௮ எனவே இயேசு அவர்களை நோக்கி, “இக்காரியங்களை எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
திராட்சைத்தோட்ட உவமை
(மத். 21:33-46; மாற். 12:1-12)
௯ பின்னர் இயேசு மக்களுக்கு இவ்வுவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் தன் வயலில் திராட்சைச் செடிகளை பயிரிட்டான். சில உழவர்களுக்கு அந்த நிலத்தைக் குத்தகையாகக் கொடுத்தான். பின்னர் நீண்டகாலம் அங்கிருந்து சென்றுவிட்டான். ௧௦ திராட்சைப் பழங்களைப் பறிக்கும் காலம் நெருங்கியது. அம்மனிதன் உழவர்களிடம் அவனது வேலைக்காரனைத் தனக்குரிய பாகமான திராட்சை பழங்களைப் பெற்றுவருமாறு அனுப்பினான். ஆனால் உழவர்கள் அந்த வேலைக்காரனை அடித்து ஒன்றுமே தராமல் அனுப்பிவிட்டார்கள். ௧௧ எனவே அம்மனிதன் இன்னொரு வேலைக்காரனை அனுப்பினான். அந்த உழவர்கள் இந்த வேலைக்காரனையும் கூட அடித்தார்கள். அவனைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. அவனுக்கு எதுவும் கொடுக்காமல் அவனை அனுப்பிவிட்டார்கள். ௧௨ எனவே அம்மனிதன் உழவர்களிடம் மூன்றாவது வேலைக்காரனை அனுப்பினான். உழவர்கள் அவனை அடித்துக் காயப்படுத்தித் துரத்திவிட்டார்கள்.
௧௩ “வயலின் சொந்தக்காரன். ‘நான் இப்போது என்ன செய்வேன்? நான் எனது மகனை அனுப்புவேன். நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். உழவர்கள் என் மகனை மதிக்கக்கூடும்’ என்று எண்ணினான். ௧௪ உழவர்கள் மகனைப் பார்த்ததும் தமக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் மகன். இவ்வயல் இவனுக்கே சேரும். இவனைக் கொன்றுவிட்டால் இவ்வயல் நமக்குச் சொந்தமாகும்’ என்று பேசிக்கொண்டனர். ௧௫ எனவே, மகனை வயலுக்கு வெளியே தூக்கி எறிந்து அவனைக் கொன்றுவிட்டனர்.
“வயலின் சொந்தக்காரன் என்ன செய்வான்? ௧௬ அவன் வந்து அந்த உழவர்களைக் கொன்றுபோடுவான். பிற்பாடு அந்த வயலை வேறு உழவர்கள் கையில் ஒப்படைப்பான்” என்றார். மக்கள் இவ்வுவமையைக் கேட்டனர்.
அவர்கள், “இல்லை, இவ்வாறு நடக்க அனுமதிக்கலாகாது” என்றனர். ௧௭ ஆனால் இயேசு அவர்கள் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு “அப்படியானால் இந்த வசனம் எதைக் கூறுகிறது:
 
“ ‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாம் எனக் கருதிய கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று’ சங்கீதம் 118:22
 
௧௮ அந்தக் கல்லின்மீது விழுகிற ஒவ்வொரு மனிதனும் நொறுங்கிப்போவான். அந்தக் கல் உங்கள் மீது விழுந்தால் அது உங்களை நசுக்கிப்போடும்!” என்றார்.
௧௯ யூத அதிகாரிகள் இயேசு கூறிய இவ்வுவமையைக் கேட்டனர். இது அவர்களைப் பற்றியே கூறப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவர்கள் இயேசுவைச் சிறைப்பிடிக்க விரும்பினார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்து அவர்கள் அஞ்சினர்.
யூத அதிகாரிகளின் தந்திரம்
(மத். 22:15-22; மாற். 12:13-17)
௨௦ எனவே வேதபாரகரும், தலைமை ஆசாரியரும் இயேசுவைப் பிடிப்பதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் சில மனிதர்களை இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்களை நல்ல மனிதர்களாக நடிக்கும்படியாகக் கூறியிருந்தார்கள். இயேசு கூறியவற்றில் குற்றம் காணும்படியாக அவர்கள் விரும்பினார்கள். (ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் அவர்கள் அதிகாரமும் ஆற்றலும் வாய்ந்த ஆளுநரிடம் இயேசுவை ஒப்படைக்க முடியும்.) ௨௧ எனவே, அந்த மனிதர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் உண்மை என்று எங்களுக்குத் தெரியும். எல்லா மக்களுக்கும் அவற்றைப் போதிக்கிறீர். தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பிக்கிறீர். ௨௨ இராயனுக்கு நாங்கள் வரி கட்டுவது சரியா இல்லையா என்பதை எங்களுக்குக் கூறுங்கள்?” என்றார்கள்.
௨௩ இயேசுவை வஞ்சிக்க அம்மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இயேசு அவர்களை நோக்கி, ௨௪ “ஒரு காசை எனக்குக் காட்டுங்கள். யாருடைய பெயர் அதில் இருக்கிறது? யாருடைய படம் அதில் உள்ளது?”
என்று கேட்டார். அவர்கள், “இராயனுடையது” என்றார்கள்.
௨௫ இயேசு அவர்களை நோக்கி “இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள். தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார்.
௨௬ அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.
சதுசேயர்களின் தந்திரம்
(மத். 22:23-33; மாற். 12:18-27)
௨௭ சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (மக்கள் மரணத்தினின்று உயிர் பெறுவதில்லை என்று சதுசேயர்கள் நம்புகிறார்கள்) அவர்கள் இயேசுவை நோக்கி, ௨௮ “போதகரே, திருமணமான மனிதன் குழந்தைகளின்றி இறந்துபோனால், அவனது சகோதரன் அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மோசே எழுதி இருந்தார். அப்படியானால் இறந்த சகோதரனுக்காகக் குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்கும். ௨௯ ஓரிடத்தில் ஏழு சகோதரர்கள் வாழ்ந்தனர். முதல் சகோதரன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் இல்லாமல் இறந்தான். ௩௦ பிறகு இரண்டாம் சகோதரன் அந்தப் பெண்ணை மணந்து இறந்து போனான். ௩௧ மூன்றாமவனும் அவளை மணந்து பின்னர் இறந்தான். ஏழு சகோதரர்களுக்கும் இதுவே நடந்தது. அவர்கள் எல்லோரும் குழந்தைகளின்றி இறந்தார்கள். ௩௨ அவர்கள் அனைவரும் இறந்த பிறகு அவளும் இறந்தாள். ௩௩ எல்லா ஏழு சகோதரர்களும் அவளை மணந்தனர். மரணத்தினின்று மக்கள் எழும்போது, அந்தப் பெண் யாருக்கு மனைவியாவாள்?” என்று கேட்டார்கள்.
௩௪ இயேசு சதுசேயரை நோக்கி, “பூமியில் மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்கின்றனர். ௩௫ சிலர் மரணத்தினின்று எழும்பி அடுத்த உலகத்தில் பங்கு பெறும் தகுதியைப் பெறுவர். அந்த வாழ்வில் அவர்கள் மணம் செய்துகொள்ளமாட்டார்கள். ௩௬ அந்த வாழ்வில் அவர்கள் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். அவர்களால் சாகமுடியாது. அவர்கள் மரணத்தினின்று எழுந்ததால் தேவனின் மக்களாவர். ௩௭ மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவர் என்பதை மோசே தெளிவாகக் காட்டினான். எரியும் புதரைப் பற்றி மோசே எழுதியபோது, அவன் கர்த்தராகிய தேவனை ஆபிரகாமின் தேவன் என்றும், ஈசாக்கின் தேவன் என்றும், யாக்கோபின் தேவன்* ஆபிரகாமின்...தேவன் யாத். 3:6. என்றும் கூறினான். ௩௮ அவர்களின் தேவன் தானே என தேவன் கூறியதால் அந்த மனிதர்கள் உண்மையாக இறக்கவில்லை. வாழும் மக்களின் தேவன் அவரே. தேவனுக்கு உரியவர்கள் வாழ்பவர்களே ஆவர்” என்றார்.
௩௯ வேதபாரகரில் சிலர், “போதகரே, உங்கள் பதில் நன்றாக இருந்தது” என்றனர். ௪௦ அடுத்த கேள்வியைக் கேட்க யாருக்கும் துணிச்சல் வரவில்லை.
கிறிஸ்து தாவீதின் குமாரனா?
(மத். 22:41-46; மாற். 12:35-37)
௪௧ பின்பு இயேசு, “தாவீதின் குமாரன் என்று கிறிஸ்துவை மக்கள் எதற்காகச் சொல்கிறார்கள்? ௪௨ சங்கீதம் என்னும் புத்தகத்தில் தாவீதே சொல்கிறார்.
 
“ ‘கர்த்தர் (தேவன்) என் ஆண்டவரிடம் (கிறிஸ்து) சொன்னார்,
௪௩ உங்கள் பகைவர்கள் உங்கள் ஆற்றலுக்கு அடங்கும்வரை என் வலப்பக்கத்தில் அமருங்கள்’ சங்கீதம் 110:1
 
௪௪ தாவீது கிறிஸ்துவை ‘ஆண்டவர்’ என்கிறான். ஆனால் கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?” என்றார்.
வேதபாரகருக்கு எச்சரிக்கை
(மத். 23:1-36; மாற். 12:38-40; லூ. 11:37-54)
௪௫ தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு பேசினார். எல்லா மக்களும் இயேசு கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ௪௬ “வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தங்களை முக்கியமானவர்களாகக் காட்டுகிற அவர்கள் அங்கிகளை அணிந்துகொண்டு அவர்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள். மக்கள் அவர்களைச் சந்தையிடங்களில் மதிப்பதையும் விரும்புகிறார்கள். ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கையில் அமர ஆசைப்படுகிறார்கள். ௪௭ ஆனால் விதவைகள் தம் வீட்டில் வைத்திருக்கிற பொருட்களையெல்லாம் கொள்ளையிடுகிறவர்கள் அவர்களே ஆவார்கள். நீண்ட பிரார்த்தனைகளைச் சொல்லித் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். தேவன் இவர்களை மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.

*௨௦:௩௭: ஆபிரகாமின்...தேவன் யாத். 3:6.