௧௮
பில்தாத் யோபுவுக்குப் பதில் கூறுகிறான்
௧ சூகியனான பில்தாத் அப்போது பதிலாக:
௨ “யோபுவே, நீ எப்போது பேசுவதை நிறுத்துவாய்?
அமைதியாயிருந்து கேளும். நாங்கள் சிலவற்றைச் சொல்ல விடும் (அனுமதியும்).
௩ நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்?
௪ யோபுவே, உனது கோபம் உன்னையே துன்புறுத்துகிறது.
உனக்காக ஜனங்கள் பூமியைவிட்டுச் செல்லவேண்டுமா?
உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக தேவன் பர்வதங்களை அசைப்பார் என்று நினைக்கிறாயா?
௫ “ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும்.
அவனது நெருப்பு எரிவதை நிறுத்தும்.
௬ வீட்டின் ஒளி இருளாகும்.
அவனருகே ஒளிவிடும் விளக்கு அணைந்துவிடும்.
௭ அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது.
ஆனால் அவன் மெதுவாகவும் சோர்வாகவும் நடப்பான்.
அவனது சொந்த தீய திட்டங்களே அவனை விழச்செய்யும்.
௮ அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும்.
அவன் கண்ணிக்குள் நடந்து அதிலே அகப்பட்டுக்கொள்வான்.
௯ அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும்.
ஒரு கண்ணி அவனை இறுகப் பிடிக்கும்.
௧௦ தரையிலுள்ள ஒரு கயிறு அவனை அகப்படுத்தும்.
அவன் வழியில் ஒரு கண்ணி அவனுக்காகக் காத்துத்கொண்டிருக்கும்.
௧௧ சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும்.
அவன் எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் பயங்கள் அவனைத் தொடரும்.
௧௨ கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும்.
அழிவும், கேடும் அவன் விழும்போது அவனுக்காகத் தயாராக இருக்கும்.
௧௩ கொடிய நோய் அவனது தோலை அரிக்கும்.
அது அவனது கரங்களையும் கால்களையும் அழுகச் செய்யும்.
௧௪ தீயவன் அவனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்படுவான்.
பயங்கரங்களின் அரசனைச் சந்திக்க அவன் அழைத்துச் செல்லப்படுவான்.
௧௫ அவன் வீட்டில் ஒன்றும் மிஞ்சியிராது.
ஏனெனில், அவன் வீடு முழுவதும் எரியும் கந்தகம் நிரம்பியிருக்கும்.
௧௬ கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும்,
மேலேயுள்ள அவன் கிளைகள் மடிந்துபோகும்.
௧௭ பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள்.
ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.
௧௮ ஜனங்கள் அவனை ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளிவிடுவார்கள்.
அவர்கள் அவனை இந்த உலகிற்கு வெளியே துரத்திவிடுவார்கள்.
௧௯ அவனுக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருக்காது.
அவன் குடும்பத்தில் எவரும் உயிரோடு விட்டு வைக்கப்படமாட்டார்கள்.
௨௦ மேற்கிலுள்ள ஜனங்கள் அத்தீயவனுக்கு நிகழ்ந்ததைக் கேள்விப்படும்போது, அதிர்ச்சியடைவார்கள்.
கிழக்கிலுள்ள ஜனங்கள் பயங்கர பீதியடைந்து வாயடைத்துப் போவார்கள்.
௨௧ தீயவனின் வீட்டிற்கு அது உண்மையாகவே நடக்கும்.
தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனுக்கு இப்படியே நிகழும்!” என்றான்.