௨௪
நல்ல அத்திகளும் கெட்ட அத்திகளும்
௧ கர்த்தர் என்னிடம் இவற்றைக் காட்டினார்: கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பு இரண்டு கூடைகள் நிறைய அத்திப் பழங்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். (பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சர் எகொனியாவைச் சிறைபிடித்துச் சென்றபின் இக்காட்சியைக் கண்டேன். எகொனியா, யோகாக்கீம் அரசனின் மகனாவான். எருசலேமிலிருந்து எகொனியாவையும் அவனது அதிகாரிகளையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நேபுகாத்நேச்சார் யூதாவிலுள்ள அனைத்து தச்சர்களையும் கொல்லர்களையும் கொண்டு சென்றான்.) ௨ ஒரு கூடையில் நல்ல அத்திப் பழங்கள் இருந்தன. அந்த அத்திப் பழங்கள் பருவத்தின் முதலில் பறித்த நல்லப் பழங்களாய் இருந்தன. ஆனால், அடுத்தக் கூடையில் அழுகிய பழங்கள் இருந்தன. அவை உண்ண முடியாத அளவிற்கு மிகவும் அழுகியதாக இருந்தன.
௩ கர்த்தர் என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய், எரேமியா?” என்று கேட்டார்.
நான், “நான் அத்திப் பழங்களைப் பார்க்கிறேன். நல்லப் பழங்கள் மிகவும் நன்றாக உள்ளன. அழுகிய பழங்கள் மிகவும் அழுகியதாக உள்ளன. அவை உண்ண முடியாத அளவிற்கு அழுகியுள்ளன” என்று பதில் சொன்னேன்.
௪ பிறகு, கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது. ௫ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறினார், “யூதாவின் ஜனங்கள் அவர்களின் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் பகைவர்கள் அவர்களைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்தனர். அந்த ஜனங்கள் இந்த நல்ல அத்திப்பழங்களைப் போன்றவர்கள். நான் அந்த ஜனங்களிடம் இரக்கத்துடன் இருப்பேன். ௬ நான் அவர்களைக் காப்பாற்றுவேன். நான் அவர்களை யூதா நாட்டிற்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கிழித்துப் போடமாட்டேன். நான் அவர்களைக் கட்டுவேன். நான் அவர்களை பிடுங்கமாட்டேன். நான் அவர்களை நட்டுவைப்பேன். அதனால் அவர்கள் வளர முடியும். ௭ நான் அவர்களை என்னை அறிந்துக்கொள்ள விரும்புமாறு செய்வேன். நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், பாபிலோனில் உள்ள அதிகாரிகள் தம் முழு மனதோடு என்னிடம் திரும்புவார்கள்.”
௮ “ஆனால் யூதாவின் அரசனான சிதேக்கியா உண்ண முடியாத அளவிற்கு அழுகிப்போன அத்திப் பழங்களைப் போன்றவன். சிதேக்கியா, அவனது உயர் அதிகாரிகள் எருசலேமில் விடப்பட்ட ஜனங்கள் மற்றும் எகிப்தில் வாழும் யூதாவிலுள்ள ஜனங்கள் அனைவரும் அழுகிய அத்திப்பழங்களைப் போன்றவர்கள். ௯ நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அது அதிர்ச்சிப்படுத்தும். யூதாவிலிருந்து வந்த ஜனங்களை மற்ற ஜனங்கள் பரிகாசம் செய்வார்கள். நான் சிதறடித்த அவர்களை, எல்லா இடங்களிலும் ஜனங்கள் சபிப்பார்கள். ௧௦ நான் அவர்களுக்கு எதிராக வாள், பசி, நோய் ஆகியவற்றை அனுப்புவேன். நான், அவர்கள் அனைவரும் அழிக்கப்படும்வரை தாக்குவேன். நான் அவர்களுக்கும் அவர்களது முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டில் அவர்கள் என்றும் இல்லாமல் போவார்கள்.”