௧௧
சமாதானத்தின் அரசர் வந்துகொண்டிருக்கிறார்
௧ ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு குழந்தை துளிர் தோன்றி வளரத் தொடங்கியது. அந்தக் கிளையானது ஈசாயின் குடும்பத்தில் வேரிலிருந்து தோன்றி வளரும். ௨ கர்த்தருடைய ஆவி அந்தச் சிறு (பிள்ளையின்) துளிர்மேல் இருக்கும். ஆவியானவர் ஞானம், புரிந்துகொள்ளுதல், வழிநடத்துதல், வல்லமை போன்றவற்றைத் தருகிறார். ஆவியானவர் அந்த பிள்ளைக்குக் கர்த்தரைத் தெரிந்துகொள்ளவும், அவரை மதிக்கவும் உதவுவார். ௩ இந்தப் பிள்ளை கர்த்தருக்கு மரியாதை கொடுக்கும். பிள்ளையை இது மகிழ்ச்சி உடையதாகச் செய்யும்.
அவர் தமது கண்கண்டபடி நியாயம்தீர்க்கமாட்டார். அவர் தமது காதில் கேட்டபடி தீர்ப்பு அளிக்கமாட்டார். ௪ - ௫ அவர் ஏழை ஜனங்களை நீதியுடனும் பொறுமையுடனும் நியாயம்தீர்ப்பார். இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களுக்குச் சரியாகத் தீர்ப்பு செய்து காரியங்களைச் செய்வார். அவர் ஜனங்களை அடிக்கவேண்டும் என்று முடிவு செய்தால், பிறகு அவர் கட்டளையிடுவார், அந்த ஜனங்கள் அடிக்கப்படுவார்கள். ஜனங்கள் மரிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தால், அவர் கட்டளையிட, பாவிகள் கொல்லப்படுவார்கள். நன்மையும் நீதியும் இந்தக் குழந்தைக்குப் பலத்தைக் கொடுக்கும். அவை அவருக்கு இடுப்பைச்சுற்றிக் கட்டப்படும் கச்சையைப் போல இருக்கும்.
௬ அப்போது, ஓநாய்கள் ஆட்டுக்குட்டிகளோடு சமாதானமாய் வாழும், புலிகள் வெள்ளாட்டுக் குட்டிகளோடு சமாதானமாய் படுத்துக்கொள்ளும். கன்றுக்குட்டியும் இளஞ்சிங்கமும் காளையும் சமாதானமாக ஒரே இடத்தில் வாழும். ஒரு சிறு பிள்ளை அவைகளை வழிநடத்துவான். ௭ பசுக்களும் கரடியும் சமாதானமாக சேர்ந்து மேயும். அவற்றின் குட்டிகள் ஒன்றையொன்று காயப்படுத்தாமல் சேர்ந்துபடுத்துக்கொள்ளும். சிங்கமானது, பசுவைப்போன்று புல்லைத் தின்னும். பாம்புகளும் கூட ஜனங்களைக் கடிக்காது. ௮ ஒரு குழந்தை நல்லபாம்பின் புற்றினருகில் விளையாட முடியும். ஒரு குழந்தை ஒரு விஷமிக்க பாம்பின் துளையில் கையை விடமுடியும்.
௯ இவையனைத்தும் சமாதானத்தைக் காட்டும். ஒருவரும் மற்றவரைத் துன்புறுத்தமாட்டார்கள். எனது பரிசுத்தமான மலையிலுள்ள ஜனங்கள் பொருட்களை அழிக்க விரும்பமாட்டார்கள். ஏனென்றால், ஜனங்கள் உண்மையிலேயே கர்த்தரை அறிந்திருக்கின்றனர். கடல் நிறைய தண்ணீர் இருப்பது போன்று அவர்களிடம் கர்த்தரைப் பற்றிய அறிவு நிறைந்திருக்கும்.
௧௦ அப்போது, ஈசாயின் குடும்பத்தில் இருந்து ஒருவர் வருவார். அவர் ஒரு கொடியைப்போல இருப்பார்.
“அக்கொடி” அனைத்து நாடுகளையும் காட்டி அவரைச் சுற்றிவரும். நாடுகளெல்லாம் தான் செய்ய வேண்டியதைப்பற்றி அவரிடம் கேட்கும். அவர் இருக்கின்ற இடமெல்லாம் மகிமை நிறைந்திருக்கும்.
௧௧ அப்போது, என் ஆண்டவரான தேவன், மீண்டும் தமது கையை உயர்த்தி மீதியான ஜனங்களை அழைத்துக்கொள்வார். இதனைத் தேவன் இரண்டாம் முறையாகச் செய்கின்றார். (இவர்கள் தேவனுடைய ஜனங்கள். இவர்கள் அசீரியா, வட எகிப்து, தென் எகிப்து, எத்தியோப்பியா, ஏலாம், பாபிலோனியா, ஆமாத், மற்றும் தூர நாடுகளிலும் மீதியாயிருந்த வர்கள்). ௧௨ தேவன் இந்தக் “கொடியை” அனைத்து ஜனங்களுக்கும் அடையாளமாக ஏற்றுவார். யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள் தம் நாட்டைவிட்டுப் போகும்படி பலவந்தப்படுத்தப்படுவார்கள். ஜனங்கள் பூமியில் உள்ள தூரநாடுகளுக்கெல்லாம் சிதறிப் போனார்கள். ஆனால் தேவன் அனைவரையும் ஒன்று சேர்ப்பார்.
௧௩ அப்போது, எப்பிராயீம் யூதாவின் மீது பொறாமைகொள்ளாது. யூதாவில் எந்தப் பகை வரும் விடுபடமாட்டார்கள். யூதா எப்பிராயீமுக்கு எவ்விதத் துன்பமும் கொடுக்காது.
௧௪ ஆனால் எப்பிராயீமும் யூதாவும் பெலிஸ்தர்களைத் தாக்குவார்கள். இந்த இரு நாடுகளும் சிறு மிருகங்களைப் பிடிக்கும் பறவைகளைப் போன்று சேர்ந்து பறக்கும். அவர்கள் இருவரும் கிழக்கு நாட்டு ஜனங்களின் ஐசுவரியத்தை கொள்ளையிடுவார்கள். எப்பிராயீமும் யூதாவும் ஏதோம், மோவாப் மற்றும் அம்மோன் ஜனங்களைக் கட்டுப்படுத்துவார்கள்.
௧௫ கர்த்தர் கோபங்கொண்டு எகிப்திலுள்ள கடலை இரண்டாகப் பிளந்தார். இதுபோல, கர்த்தர் தனது கையை ஐபிராத்து ஆற்றின் மேல் அசைப்பார். அவர் ஆற்றை அடித்ததும் அது ஏழு சிறு ஆறுகளாகப் பிரியும். இந்தச் சிறு ஆறுகள் ஆழம் குறைந்தவை. இவற்றில் ஜனங்கள் தம் பாதரட்சைச் கால்களோடு எளிதாக நடந்துபோகலாம். ௧௬ தேவனுடைய ஜனங்கள் அசீரியாவை விட்டுச் செல்ல ஒரு பாதை கிடைக்கும். இது தேவன் எகிப்தை விட்டு ஜனங்களை வெளியே கொண்டுவந்தது போல இருக்கும்.