௩௦
௧ ராகேல், தன்னால் யாக்கோபுக்குக் குழந்தைகளைக் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். அவளுக்கு தன் சகோதரி லேயாள் மீது பொறாமை வந்தது. அவள் யாக்கோபிடம் “எனக்குக் குழந்தையைக் கொடும் அல்லது நான் மரித்துப் போவேன்” என்றாள்.
௨ அவனுக்கு அவள் மீது கோபம் வந்தது. அவன், “நான் தேவன் இல்லை. நீ குழந்தை பெற முடியாததற்குத் தேவனே காரணம்” என்றான்.
௩ பிறகு ராகேல் அவனிடம், “நீர் என் வேலைக்காரி பில்காளோடு பாலின உறவு கொண்டால், எனக்காக அவள் ஒரு குழந்தையைப் பெற்றுத் தருவாள். அவள் மூலம் நான் தாயாக விரும்புகிறேன்” என்றாள்.
௪ பின் தனது வேலைக்காரி பில்காளை யாக்கோபிற்குக் கொடுத்தாள். அவன் அவளோடு பாலின உறவு கொண்டான். ௫ பில்காள் கருவுற்று ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள்.
௬ ராகேல் மகிழ்ந்து, “தேவன் என் பிரார்த்தனையைக் கேட்டு, எனக்கு ஒரு மகனை கொடுத்தார்” என்று கூறி அவனுக்குத் தாண் என்று பெயர் வைத்தாள்.
௭ பில்காள் மீண்டும் கர்ப்பமுற்று இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ராகேல் நப்தலி என்று பெயரிட்டு, ௮ “எனது சகோதரியோடு போராட நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். நான் வென்றுவிட்டேன்” என்றாள்.
௯ லேயாள் தனக்கு மேலும் குழந்தை இல்லாததைக் கவனித்தாள். மேலும் குழந்தை வேண்டும் என்று தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்குக் கொடுத்தாள். ௧௦ பிறகு சில்பாளுக்கும் ஒரு மகன் பிறந்தான். ௧௧ “நான் பாக்கியசாலி” என்று லேயாள் மகிழ்ந்தாள். பின் அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள். ௧௨ சில்பாள் மேலும் ஒரு மகனைப் பெற்றாள். ௧௩ லேயாள் “நான் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பார்க்கும் பெண்களும் மகிழ்ச்சியுடன் அழைப்பார்கள்” என்று எண்ணினாள். எனவே அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.
௧௪ கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயலுக்குப் போனான். அங்கு சில புதுவகை மலர்களைக்* புதுவகை மலர்கள் அல்லது “மாந்தரேக் பூ” எபிரேய மொழியில் “விருப்ப பூ” எனப்படும். இவ்வகைப் பூக்கள் பெண்களுக்கு குழந்தைகளை பெற உதவும் என மக்கள் நினைத்தார்கள். கண்டான். அதனைப் பறித்துக்கொண்டு தன் தாயான லேயாளிடம் வந்தான். ராகேல் இதனைப் பார்த்து, “உன் மகன் கொண்டுவந்த மலர்களில் சிலவற்றை எனக்குக் கொடு” என்று கேட்டாள்.
௧௫ அதற்கு லேயாள், “ஏற்கெனவே என் கணவனை எடுத்துக்கொண்டிருக்கிறாய். இப்போது என் மகன் கொண்டு வந்த மலர்களையும் எடுக்கப் பார்க்கிறாயா?” என்று மறுத்தாள்.
ஆனால் ராகேலோ, “நீ அந்த மலர்களைக் கொடுத்தால் இன்று இரவு நீ யாக்கோபோடு பாலின உறவுகொள்ளலாம்” என்று சொன்னாள்.
௧௬ யாக்கோபு அன்று இரவு வயலில் இருந்து திரும்பினான். அவனை லேயாள் போய் சந்தித்து, “இன்று இரவு நீங்கள் என்னோடு தூங்கவேண்டும். நான் அதற்காக என் மகன் கொண்டு வந்த மலர்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள். அவன் அன்று இரவு அவளோடு இருந்தான்.
௧௭ தேவன் லேயாளை மீண்டும் கர்ப்பவதியாக அனுமதித்தார். அவள் ஐந்தாவது மகனைப் பெற்றாள். ௧௮ லேயாள், “நான் என் கணவனுக்கு வேலைக்காரியை கொடுத்ததால் தேவன் எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்” என்று மகிழ்ந்தாள். தன் மகனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
௧௯ லேயாள் மீண்டும் கர்ப்பமாகி ஆறாவது மகனைப் பெற்றாள். ௨௦ லேயாள் “தேவன் எனக்கு அற்புதமான பரிசு கொடுத்திருக்கிறார். இப்போது யாக்கோபு என்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நான் அவருக்கு ஆறு மகன்களைக் கொடுத்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சி அடைந்தாள். அவனுக்கு செபுலோன் என்று பெயர் வைத்தாள்.
௨௧ பிறகு அவள் ஒரு மகளைப் பெற்றாள். அவளுக்கு தீனாள் என்று பெயர் வைத்தாள்.
௨௨ பிறகு தேவன் ராகேலின் பிரார்த்தனையைக் கேட்டு, அவளும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். ௨௩-௨௪ அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றாள். “தேவன் எனது அவமானத்தை அகற்றி ஒரு மகனைத் தந்துவிட்டார்” என்று மகிழ்ச்சியடைந்தாள். அவள் தன் மகனுக்கு யோசேப்பு என்று பெயர் வைத்தாள்.
லாபானுடன் யாக்கோபின் தந்திரம்
௨௫ யோசேப்பு பிறந்த பிறகு யாக்கோபு லாபானிடம், “இப்போது என்னை என் சொந்த நாட்டிற்குப் போக அனுமதிக்க வேண்டும். ௨௬ எனக்கு எனது மனைவிகளையும் குழந்தைகளையும் தாருங்கள். நான் 14 ஆண்டுகளாக அவர்களுக்காக உழைத்திருக்கிறேன். நான் நன்றாக உழைத்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியுமே” என்றான்.
௨௭ லாபான், “என்னையும் ஏதாவது சொல்லவிடு. உன்னால் கர்த்தர் என்னை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நான் அறிவேன். ௨௮ நான் உனக்கு என்ன தரவேண்டும் என்று சொல், நான் தருவேன்” என்றான்.
௨௯ “நான் உங்களுக்காக கடினமாக உழைத்ததை நீங்கள் அறிவீர்கள். நான் கவனித்ததால் உங்கள் மந்தைகள் பெருகியுள்ளன. ௩௦ நான் வந்து சேர்ந்தபோது உங்களிடம் குறைவான எண்ணிக்கையிலேயே மந்தைகள் இருந்தன. இப்போது ஏராளமாக உள்ளன. எப்பொழுதும் உங்களுக்காக ஏதாவது வேலை செய்தேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்தார். இப்போது நான் எனக்காக உழைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள வேண்டும்” என்றான்.
௩௧ அதற்கு லாபான், “நான் என்ன தர வேண்டும்” என்று கூறு எனக் கேட்டான்.
யாக்கோபு அவனிடம், “நீங்கள் எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். நான் செய்த வேலைக்கு மட்டும் சம்பளம் கொடுங்கள். இந்தக் காரியம் மட்டும் செய்யுங்கள். நான் திரும்பிப் போய் உங்கள் மந்தையைக் கவனித்துக்கொள்கிறேன். ௩௨ அவற்றில் புள்ளியும் வரியும் கறுப்பும் உள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் இன்று பிரித்துவிடுகிறேன். ஒவ்வொரு கறுப்பு இன ஆட்டையும் நான் எடுத்துக்கொள்கிறேன். புள்ளியும் வரியும் உடைய ஒவ்வொரு பெண் ஆட்டையும் எடுத்துக்கொள்கிறேன். இதுவே என் சம்பளமாய் இருக்கும். ௩௩ நான் நேர்மையானவனாக இருக்கிறேனா இல்லையா என்பதை எதிர்காலத்தில் எளிதில் கண்டுகொள்ளலாம். அப்போது நீங்கள் எனது மந்தையை வந்து காணலாம். புள்ளியும் வரியுமில்லாத ஆடுகளைக் கண்டால் அவை என்னால் திருடப்பட்டதாகக்கொள்ளலாம்” என்றான்.
௩௪ “நான் இதற்கு ஒத்துக்கொள்கிறேன். நீ கேட்டபடியே தருகிறேன்” என்று லாபான் கூறினான். ௩௫ அன்று லாபான் புள்ளி உள்ள ஆட்டுக்கடாக்களையும், ஆடுகளையும் பிரித்து மறைத்துவிட்டான். கறுப்பு ஆடுகளையும் தனியாகப் பிரித்து மறைத்தான். அவற்றைத் தன் மகன்களிடம் கொடுத்து கவனிக்கும்படி சொன்னான். ௩௬ அவர்கள் புள்ளி ஆடுகளையெல்லாம் மூன்று நாள் பயண தூரத்திற்குத் தனியாகக் கொண்டு போனார்கள். மிஞ்சியவற்றை யாக்கோபு கவனித்துக்கொண்டான். புள்ளியோ, வரிகளோ கொண்ட ஆடுகள் எதுவும் யாக்கோபிடம் இல்லை.
௩௭ எனவே அவன் பச்சையாக உள்ள புன்னை, வாதுமை, அர்மோன் மரக் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்தான். ௩௮ அவற்றை அவன் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் இடங்களில் போட்டு வைத்தான். அவை தண்ணீர் குடிக்கும்போது கடாவும் ஆடும் இணைந்தன. ௩௯ ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்னால் இணைந்ததினால் அவை கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டன.
௪௦ யாக்கோபு மந்தையில் இருந்து புள்ளிகளும் கறுப்பும் உள்ள ஆடுகளைத் தனியாகப் பிரித்தான். அவற்றை லாபானின் ஆட்டிலிருந்து தனிப்படுத்தினான். ௪௧ பலமுள்ள ஆடுகள் இணையும்போது அவற்றின் கண்களில் படுமாறு மரக்கிளைகளைக் கால்வாய்க் கரையில் போட்டு வைத்தான். ௪௨ ஆனால் பல வீனமுள்ள ஆடுகள் இணையும்போது போடமாட்டான். அதன் குட்டிகள் எல்லாம் லாபானுக்கு உரியதாயிற்று. பலமுள்ள ஆடுகளின் குட்டிகள் எல்லாம் யாக்கோபுக்கு உரியதாயிற்று. ௪௩ இவ்வாறு யாக்கோபு பெரும் பணக்காரன் ஆனான். அவனிடம் பெரிய மந்தை இருந்தது. அதோடு வேலைக்காரர்களும், ஒட்டகங்களும் கழுதைகளும் சொந்தமாயின.

*௩௦:௧௪: புதுவகை மலர்கள் அல்லது “மாந்தரேக் பூ” எபிரேய மொழியில் “விருப்ப பூ” எனப்படும். இவ்வகைப் பூக்கள் பெண்களுக்கு குழந்தைகளை பெற உதவும் என மக்கள் நினைத்தார்கள்.