௪௮
இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குரிய நிலம்
௧-௭ “வடக்கெல்லையானது, மத்தியதரைக் கடலிலிருந்து கிழக்கு நோக்கி எத்லோன் வழியாக ஆமாத்துக்குப் போகும். பிறகு அது ஆத்சார் ஏனானுக்குப் போகும். இது தமஸ்குவுக்கும் ஆமாத்துக்கும் இடையிலுள்ள எல்லை. கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லைவரை இத்தேசம் கோத்திரங்களுக்கு உரியதாகும். வடக்கிலிருந்து தெற்கு வரை இப்பகுதி தாண், ஆசேர், நப்தலி, மனாசே, எப்பிராயீம், ரூபன், யூதா ஆகிய கோத்திரங்களுக்குரியதாகும்.
தேசத்தின் சிறப்பான பகுதி
௮ “தேசத்தின் அடுத்த பகுதியானது சிறப்புப் பயன்பாட்டுக்கு உரியதாகும். இது யூதா நிலத்தின் தென்பகுதியாகும். இப்பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக வடக்கிலிருந்து தெற்குவரை உள்ளது. கிழக்கிலிருந்து மேற்காக இருக்கிற பங்குகளில் மற்றக் கோத்திரங்களுக்குச் சொந்தமான நிலத்தின் அகல அளவே இருக்கும். இந்தப் பகுதியின் நடுவில் ஆலயம் இருக்க வேண்டும். ௯ நீங்கள் இந்தப் பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். ௧௦ இத்தனியான பகுதி ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படவேண்டும்.
“ஆசாரியர்கள் இதன் ஒரு பகுதியைப் பெறுவார்கள். இப்பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக வடபுறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக மேற்கு புறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக கிழக்குப் புறத்திலும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக தெற்கு புறத்திலும் இருக்கும். இப்பகுதியின் நடுவில் கர்த்தருடைய ஆலயம் அமைக்கப்படும். ௧௧ இப்பகுதி சாதோக்கின் சந்ததிகளான ஆசாரியர்களுக்கு உரியது. இவர்கள் எனது பரிசுத்தமான ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஏனென்றால், இஸ்ரவேலின் ஜனங்கள் வழி தப்பிப்போகையில், லேவியர் வழி தப்பிப்போனது போன்று சாதோக்கின் குடும்பம் போகவில்லை. ௧௨ நிலத்தின் இந்தப் பரிசுத்தமான பகுதியிலிருக்கும் இந்தச் சிறப்பான பங்கானது ஆசாரியர்களுக்குரியது. இது லேவியரின் நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும்.
௧௩ “ஆசாரியர்களின் பங்குக்கு அடுத்து லேவியரின் பங்கு இருக்கும். அது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் உடையது. அவர்கள் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6. மைல்) அகலமும் உடைய முழு நீளமும் அகலமும் உள்ள நிலத்தைப் பெறுவார்கள். ௧௪ லேவியர்கள் இந்தப் பங்கை விற்கவோ மாற்றவோ முடியாது. அவர்கள் இதனை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் முடியாது! ஏனென்றால், இப்பகுதி கர்த்தருக்குரியது. இது தனிச் சிறப்புடையது. இது தேசத்தின் சிறந்த பகுதியாக இருக்கும்.
நகரச் சொத்திற்குப் பங்குகள்
௧௫ “5,000 முழம் (1.6 மைல்) அகலமும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் கொண்ட நிலப்பகுதி ஆசாரியர்களுக்காகவும் லேவியர்களுக்காகவும் கொடுத்த நிலத்தின் மீதியாகும். இது நகரத்துக்கும் மிருகங்களின் மேய்ச்சலுக்கும் வீடுகள் கட்டுவதற்கும் உதவும் போது ஜனங்கள் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மத்தியில் நகரம் அமையும். ௧௬ இவை தான் நகரத்தின் அளவுகள்: வடப்பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). தென் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). கிழக்குப் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). மேற்குப் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). ௧௭ நகரத்தில் புல்வெளி இருக்கும். இது 250 முழம் (437’6”) வடக்கு பக்கத்திலும், 250 முழம் (437’6”) தெற்குப் பக்கத்திலும், 250 முழம் (437’6”) கிழக்குப் பக்கத்திலும் 250 முழம் (437’6”) மேற்குப் பக்கத்திலும் இருக்கும். ௧௮ பரிசுத்தமான பரப்பிற்குப் பக்கம் ஓடும் நீள அளவு எவ்வளவு விடப்பட்டிருக்கிறதோ அது 10,000 முழம் (3.3 மைல்) கிழக்கிலும் 10,000 முழம் (3.3 மைல்) மேற்கிலும் இருக்கும். இது பரிசுத்தமான பரப்பிற்கு பக்கவாட்டிலிருக்கும். இந்நிலத்தில் நகர வேலைக்காரர்களுக்காக உணவு விளையும். ௧௯ நகர வேலைக்காரர்களுக்காக இந்த நிலத்தை உழுவார்கள். அவர்கள் எல்லா கோத்திரங்களிலிருந்தும் இருப்பார்கள்.
௨௦ “இத்தனிச் சிறப்புகுரிய பகுதி சதுரமாக இருக்கும். இது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 25,000 முழம் (8.3 மைல்) அகலமும் உடையது. இதன் ஒரு பகுதி ஆசாரியர்களுக்கும் இன்னொரு பகுதி லேவியர்களுக்கும் உரியதாகும். ஒரு பகுதி நகரத்திற்குரியது.
௨௧-௨௨ “ஒரு பகுதி அதிபதிக்குரியது. அது சதுரமாயிருக்கும் 25,000 முழம் நீளமும் 25,000 முழம் அகலமுமானது. சிறப்பான நிலத்தின் ஒரு பகுதி. ஆசாரியருக்குரியதும், ஒரு பகுதி லேவியருக்குமாகும். இப்பரப்பின் நடுவில் ஆலயம் இருக்கிறது. மீதியுள்ள நிலப்பகுதி நாட்டின் அதிபதிக்கு உரியதாகும். அதிபதி பென்யமீனின் நிலத்திற்கும் யூதா நிலத்திற்கும் இடைப்பட்ட பகுதியைப் பெற்றுக்கொள்வான்.
௨௩-௨௭ “சிறப்பான பகுதிக்குத் தெற்கே உள்ள பகுதி யோர்தான் ஆற்றுக்கு கிழக்குப் பகுதியில் வாழும் கோத்திரங்களுக்கு உரியதாகும். ஒவ்வொரு கோத்திரமும் கிழக்கு எல்லையிலிருந்து மத்தியதரைக் கடல்வரைக்கும் வடக்கும் தெற்கும் உள்ள பகுதியில் தம் பிரிவைப் பெறுவார்கள். பென்யமீன், சிமியோன், இசக்கார், செபுலோன், காத் ஆகியோர் வடக்கிலிருந்து தெற்குவரையுள்ள கோத்திரங்களாவார்கள்.
௨௮ “காத்தின் நிலப்பகுதிக்கு தெற்கு எல்லையானது தாமாரில் தொடங்கி மெரிபா-காதேஷ் பாலைவனச் சோலை வழியாக எகிப்தின் சிற்றாறு வழியாக மத்தியதரைக் கடல்வரை போகும். ௨௯ அந்த நிலப்பகுதிதான் இஸ்ரவேலின் கோத்திரங்களாகிய நீங்கள் பங்கிடப் போகும் பகுதி. ஒவ்வொரு கோத்திரமும் பெறப்போகும் பகுதியும் இதுதான்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்!
நகரத்தின் வாசல்கள்
௩௦ “இவை நகரத்தின் வாசல்களாகும். இவ்வாசல்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களைப் பெறும்.
“நகரத்தின் வட பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. ௩௧ அங்கே மூன்று வாசல்கள் இருக்கும்: அவை ரூபனின் வாசல், யூதாவின் வாசல், லேவியின் வாசல்.
௩௨ “நகரத்தின் கிழக்குப் பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும்: அவை யோசேப்பின் வாசல், பென்யமீனின் வாசல், தாணின் வாசல்.
௩௩ “நகரத்தின் தென் பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும். அவை: சிமியோனின் வாசல், இசக்காரின் வாசல், செபுலோனின் வாசல்.
௩௪ “நகரத்தின் மேற்கு பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும். அவை: காத்தின் வாசல், ஆசோரின் வாசல், நப்தலியின் வாசல்.
௩௫ “நகரத்தைச் சுற்றிலும் உள்ள அளவானது 18,000 முழம் (6 மைல்) ஆகும். இப்போதிருந்து அந்த நகரத்தின் பெயர்: கர்த்தர் அங்கே இருக்கிறார்.”