௪௪
வெளிவாசல்
௧ பிறகு அம்மனிதன் என்னை ஆலயத்தின் கிழக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அது பூட்டப்பட்டிருந்தது. ௨ கர்த்தர் என்னிடம் சொன்னார்: “இந்த வாசல் திறக்கப்படாது. இது எப்பொழுதும் பூட்டப்பட்டிருக்கும். இதன் வழியாக எவரும் நுழைய முடியாது. ஏனென்றால், இஸ்ரவேலின் கர்த்தர் இதன் வழியாக நுழைந்திருக்கிறார். எனவே இது எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். ௩ இந்த வாசலில் உட்கார ஜனங்களின் அதிபதிக்கு மாத்திரமே உரிமையுண்டு. கர்த்தருடைய சந்நிதியில் உணவு உண்ணும்போது உட்காரலாம். அவன் வாசல் மண்டபக் கதவு வழியாக நுழைந்து அதே வழியாக வெளியேற வேண்டும்.”
ஆலயத்தின் பரிசுத்தம்
௪ பிறகு அந்த மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக ஆலயத்தின் முன்புறத்திற்கு அழைத்துவந்தான். நான் கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தில் நிறைந்திருப்பதைக் கண்டேன். நான் தரையில் முகம்குப்புற விழுந்தேன். ௫ கர்த்தர் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, கவனமாகப் பார்! உன் கண்களையும் காதுகளையும் பயன்படுத்து. இவற்றைக் கவனி. நான் உனக்குக் கர்த்தருடைய ஆலயத்தின் சகல விதிகளையும் அதன் சகல சட்டங்களையும் பற்றிச் சொல்வதைக் கவனமாகக் கேள். ஆலயத்தின் எல்லா நுழை வாசல்களையும் பரிசுத்த இடத்திலிருந்து வெளியேறும் வாசல்களையும் கவனமாகப் பார். ௬ பிறகு இந்தச் செய்தியை எனக்குக் கீழ்ப்படிய மறுத்த இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடு. அவர்களிடம் சொல்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளும் போதும்! ௭ நீங்கள் எனது ஆலயத்திற்குள் அந்நியரை அழைத்து வந்தீர்கள். அந்த ஜனங்கள் உண்மையாகவே விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை. அவர்கள் தம்மை எனக்கு முழுமையாகக் கொடுக்கவில்லை. இவ்வாறு நீங்கள் என் ஆலயத்தை அசுத்தம் செய்தீர்கள். நீங்கள் நமது உடன்படிக்கையை உடைத்தீர்கள். நீங்கள் அருவருப்பான செயல்களைச் செய்தீர்கள். பிறகு நீங்கள் அப்பம், கொழுப்பு, இரத்தம் ஆகிய காணிக்கைகளைக் கொடுத்தீர்கள். ஆனால், இவைகளே என் ஆலயத்தை அசுத்தமாக்கின. ௮ நீங்கள் எனது பரிசுத்தமான பொருட்களைக் கவனித்துக்கொள்ளவில்லை. நீங்கள் எனது பரிசுத்த இடத்தின் பொறுப்பை அந்நியர்களிடம் விட்டுவிட்டீர்கள்!’ ”
௯ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உண்மையான விருத்தசேதனம் செய்துகொள்ளாத அந்நியன் என் ஆலயத்திற்குள் வரக் கூடாது. இஸ்ரவேலர் மத்தியில் நிரந்தரமாக வாழும் அந்நியனும் என் ஆலயத்திற்குள் வருவதற்கு முன் விருத்தசேதனம் செய்துகொண்டு தன்னை எனக்கு முழுமையாகத் தரவேண்டும். ௧௦ கடந்த காலத்தில் இஸ்ரவேலர்கள் என்னைவிட்டு விலகிய போது லேவியர்கள் என்னைவிட்டு விலகினார்கள். இஸ்ரவேலர்கள் தம் விக்கிரகங்களை பின்பற்றுவதற்காக என்னிடமிருந்து விலகினார்கள். லேவியர்கள் தம் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவார்கள். ௧௧ லேவியர்கள் எனது பரிசுத்தமான இடத்தில் சேவை செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் ஆலயத்தின் வாசலைக் காவல் செய்தார்கள். அவர்கள் ஆலயத்திற்குள் சேவை செய்தார்கள். அவர்கள் பலியிடுவதற்காக மிருகங்களைக் கொன்றார்கள். ஜனங்களுக்காகத் தகன பலிகளைச் செய்தார்கள். அவர்கள் ஜனங்களுக்கு உதவுவதற்காகவும் சேவை செய்வதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ௧௨ ஆனால் அந்த லேவியர்கள் எனக்கு விரோதமாகப் பாவம் செய்வதற்கு உதவினார்கள்! அவர்கள், விக்கிரகங்களைத் தொழுதுக்கொள்ள ஜனங்களுக்கு உதவி செய்தார்கள்! எனவே நான் அவர்களுக்கு விரோதமாக இந்த ஆணையைச் செய்கிறேன்: ‘அவர்கள் தமது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவார்கள்.’ ” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
௧௩ “எனவே ஆசாரியர்களைப் போன்று லேவியர்கள் காணிக்கைகளை எனக்குக் கொண்டுவரமாட்டார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான பொருட்களுக்கு அருகிலே வரமாட்டார்கள். அல்லது மிகப் பரிசுத்த பொருட்களுக்கு அருகிலும் வரமாட்டார்கள். அவர்கள் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களுக்காக அவமானங்களைச் சுமக்க வேண்டும். ௧௪ ஆனால், அவர்கள் ஆலயத்தின் பொறுப்பை எடுத்துக்கொள்ள அனுமதிப்பேன். அவர்கள் ஆலயத்திற்குள் வேலைசெய்வார்கள். செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வார்கள்.
௧௫ “ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் வம்சத்திலிருந்து வந்தவர்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் என்னை விட்டு விலகிப் போனபோது, சாதோக்கின் குடும்பத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் மட்டுமே எனது பரிசுத்தமான இடத்தைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். எனவே சாதோக்கின் குடும்பத்தார் மட்டுமே எனக்கு காணிக்கை கொண்டுவரவேண்டும். அவர்கள் எனக்கு முன்னே நின்று கொழுப்பையும் இரத்தத்தையும் செலுத்துவார்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். ௧௬ “அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குள் நுழைவார்கள். எனக்கு சேவை செய்ய என் பீடத்தின் அருகில் வருவார்கள். நான் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களைக் கவனித்துக்கொள்வார்கள். ௧௭ அவர்கள் உள் பிரகாரத்தின் வாசலுக்குள் நுழைகிறபோது சணல்நூல் ஆடைகளை அணிந்துகொள்வார்கள். அவர்கள் உட்பிரகாரத்தின் வாசல்களிலும் உள்ளேயும் ஆராதனை செய்யும்போது ஆட்டுமயிர் ஆடையை அணியக் கூடாது. ௧௮ அவர்கள் தம் தலையில் சணல் தலைப்பாகை அணிவார்கள். அவர்கள் தம் இடைகளில் சணல் நூல் உள்ளாடைகளைக் கட்டுவார்கள். வியர்வை உண்டாக்கத்தக்க எந்த ஆடைகளையும் அவர்கள் அணியமாட்டார்கள். ௧௯ அவர்கள் வெளிப் பிரகாரமாகிய புறமுற்றத்திலுள்ள ஜனங்களிடம் போகும்போது, தாங்கள் ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி விடுவார்கள். அவற்றை பரிசுத்த அறைகளில் வைப்பார்கள். பிறகு அவர்கள் வேறு ஆடைகளை அணிவார்கள், இவ்வாறு அவர்கள் தம் பரிசுத்தமான ஆடைகளை ஜனங்கள் தொடவிடமாட்டார்கள்.
௨௦ “இந்த ஆசாரியர்கள் தம் தலைகளைச் சிரைக்கவோ தங்கள் மயிரை நீளமாக வளர்க்கவோ மாட்டார்கள். இவ்வாறு செய்தால் அவர்கள் சோகமாய் இருப்பதாகக் காட்டும். கர்த்தருக்குச் சேவைசெய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். எனவே அவர்கள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளவேண்டும். ௨௧ அவர்கள் உட்பிரகாரத்திற்குள் செல்லும்போது எந்த ஆசாரியரும் திராட்சைரசம் குடித்திருக்கக் கூடாது. ௨௨ ஆசாரியர்கள் ஒரு விதவையையோ, விவாகரத்து பெற்றவளையோ மணக்கக் கூடாது. அவர்கள் இஸ்ரவேல் வம்சத்திலுள்ள கன்னிப் பெண்களையோ அல்லது மரித்துப்போன ஆசாரியனின் விதவையையோ மாத்திரம் மணந்துக்கொள்ளலாம்.
௨௩ “அதோடு ஆசாரியர்கள் ஜனங்களுக்குப் பரிசுத்தமானவை எவை என்றும் பரிசுத்தமற்றவை எவை என்றும் கற்பிக்கவேண்டும். அவர்கள், எனது ஜனங்கள் சுத்தமானவை எவையென்றும், சுத்தமற்றவை எவை என்றும் தெரிந்துகொள்ள உதவவேண்டும். ௨௪ ஆசாரியர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பார்கள். எனவே, ஜனங்களை அவர்கள் நியாயம்தீர்க்கும்போது எனது சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். எனது அனைத்து சிறப்புப் பண்டிகைகளிலும் அவர்கள் என் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையுமே கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் எனது சிறப்பு ஓய்வு நாட்களை மதித்து அவற்றைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ள வேண்டும். ௨௫ அவர்கள் மரித்த உடல்களுக்கு அருகில் போய்த் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது, ஆனால் மரித்துப்போனவர்கள் ஆசாரியரின் தந்தை, தாய், மகன், மகள், சகோதரன் அல்லது மணமாகாத சகோதரியாக இருந்தால் அவர்கள் அதன் மூலம் தீட்டடைந்தாலும் அதன் அருகில் போகலாம். ௨௬ அது ஆசாரியனை தீட்டுப்படுத்தும். பிறகு, ஆசாரியன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்ட பிறகு ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும். ௨௭ பிறகே அவனால் பரிசுத்தமான இடத்திற்குத் திரும்பிப் போகமுடியும். ஆனால் அவன் உட்பிரகாரத்திற்குள் ஆராதனைக்குச் செல்லும் நாளில் அவன் தனக்காகப் பாவப்பரிகாரப் பலியைக் கொடுக்கவேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
௨௮ “லேவியர்களுக்குரிய நிலங்களைப் பற்றியது: நானே அவர்களின் சொத்து. நீங்கள் இஸ்ரவேலில் லேவியர்களுக்கென்று எந்தச் சொத்தும் கொடுக்க வேண்டாம். நானே இஸ்ரவேலில் அவர்களின் பங்கு. ௨௯ அவர்கள் உண்பதற்காக தானியக் காணிக்கை, பாவப்பரிகாரப் பலி, குற்றநிவாரணபலி ஆகியவற்றைப் பெறுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கென்று கொடுக்கும் அனைத்தும் அவர்களுக்கு உரியதாகும். ௩௦ எல்லாவகை விளைச்சலிலும் உள்ள முதல் அறுவடை ஆசாரியர்களுக்கு உரியதாகும். நீங்களும் உங்களது பிசைந்த மாவின் முதல் பகுதியைக் கொடுப்பீர்கள். அது உங்கள் வீட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும். ௩௧ ஆசாரியர்கள் இயற்கையாக மரித்துப்போன எந்தப் பறவைகளையோ மிருகங்களையோ உண்ணக்கூடாது. காட்டு மிருகங்களால் துண்டுத் துண்டாகக் கிழித்தெறியப்பட்டவற்றையும் அவர்கள் உண்ணக் கூடாது.