௩௩
நான் உங்களோடு வரமாட்டேன்
௧ பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “நீயும், நீ எகிப்திலிருந்து வழிநடத்திய ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட வேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக நான் வாக்குறுதி அளித்த தேசத்திற்குச் செல்லுங்கள். அவர்களின் சந்ததிக்கு அத்தேசத்தைக் கொடுப்பதாகச் சொன்னேன். ௨ எனவே உங்களுக்கு முன்பாகச் செல்வதற்கு ஒரு தூதனை அனுப்புவேன். கானானியரையும், எமோரியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும், நான் தோற்கடிப்பேன். உங்கள் தேசத்தைவிட்டு அவர்கள் போகும்படியாகச் செய்வேன். ௩ எனவே உச்சி தமான பொருட்களால் நிரம்பியுள்ள அத்தேசத்திற்குச் செல்லுங்கள். ஆனால் நான் உங்களோடு வரமாட்டேன். நீங்கள் பிடிவாத மான ஜனங்கள். என்னை மிகவும் கோபப்படுத்துகிறீர்கள். நான் உங்களோடு வந்தால் ஒருவேளை வழியிலேயே உங்களை அழித்து விடுவேன்” என்றார்.
௪ ஜனங்கள் இந்தச் செய்தியைக் கேட்டுக் கவலையடைந்தனர். அவர்கள் ஆபரணங்கள் அணிவதை விட்டுவிட்டனர். ௫ ஏனெனில் கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறு, ‘நீங்கள் பிடிவாதமான ஜனங்கள். சிறிது காலம் உங்களோடு வந்தாலும் நான் உங்களை அழித்து விடக்கூடும். நான் உங்களுக்கு என்ன செய்வதென முடிவெடுக்கும்வரை உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள்’ என்று கூறு” என்றார். ௬ (சீனாய்) ஓரேப் மலையருகே இஸ்ரவேல் ஜனங்கள் ஆபரணங்களை அணிவதை விட்டுவிட்டனர்.
தற்காலிக ஆசரிப்புக் கூடாரம்
௭ பாளையத்துக்கு வெளியே சற்று தூரத்தில் மோசே ஒரு கூடாரத்தை எடுத்துச் செல்வது வழக்கம். மோசே அதை “ஆசரிப்புக் கூடாரம்” என்று அழைத்தான். கர்த்தரிடமிருந்து எதையாவது கேட்டறிய விரும்புகிறவன் பாளையத்துக்கு வெளியே ஆசாரிப்புக் கூடாரத்திற்குச் செல்வான். ௮ மோசே அக்கூடாரத்திற்குப் போகும் போதெல்லாம் ஜனங்கள் அவனைக் கவனித்து நோக்கினார்கள். ஜனங்கள் அவரவர் கூடாரத்தின் வாயிலில் வந்து நின்று, மோசே ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவதைப் பார்த்தனர். ௯ மோசே கூடாரத்திற்கு போகும்போதெல்லாம் நீண்ட மேகம் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் தங்கும். கர்த்தர் மோசேயோடு பேசுவார். ௧௦ ஜனங்கள் கூடார வாசலில் மேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவரவர் கூடார வாசல்களுக்குச் சென்று கீழே குனிந்து கர்த்தரை வணங்கினார்கள்.
௧௧ இவ்வாறு கர்த்தர் மோசேயுடன் நேருக்கு நேராக நின்று பேசினார். ஒரு மனிதன் தன் நண்பனிடம் பேசுவதுபோல கர்த்தர் மோசேயுடன் பேசினார். கர்த்தரிடம் பேசியபிறகு, மோசே தங்குமிடத்துக்குத் திரும்பினான். ஆனால் அவனது உதவியாளன் எப்போதும் கூடரத்திலேயே இருந்தான். அந்த உதவியாளன் நூனின் மகனாகிய யோசுவா என்பவனாவான்.
கர்த்தருடைய மகிமையை மோசே காண்கிறான்
௧௨ மோசே கர்த்தரை நோக்கி, “இந்த ஜனங்களை வழிநடத்துமாறு நீர் சொன்னீர். ஆனால் என்னோடு வருபவர் யார் என்பதை நீர் கூறவில்லை. நீர் என்னிடம், ‘உன்னை நன்கு அறிவேன். உன்னைக் குறித்து பிரியமாயிருக்கிறேன்.’ என்றீர். ௧௩ நான் உண்மையாகவே உம்மை திருப்திப்படுத்தியிருந்தால் உமது வழிகளை எனக்குப் போதியும். நான் உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் தொடர்ந்து உம்மைப் பிரியப்படுத்துவேன். இவர்கள் உமது ஜனங்கள் என்பதை நினைவுகூரும்” என்றான்.
௧௪ கர்த்தர், “நான் உன்னோடுகூட வருவேன். உன்னை வழிநடத்துவேன்” என்றார்.
௧௫ அப்போது மோசே கர்த்தரை நோக்கி, “நீர் வழி நடத்தவில்லையெனில், என்னை இவ்விடத்திலிருந்து அனுப்பாதிரும். ௧௬ மேலும், என்னிடமும் இந்த ஜனங்களிடமும் திருப்தியடைந்துள்ளீர் என்பதை நான் எவ்வாறு அறிவேன்? நீர் எங்களோடு வந்தால், அதை நிச்சயமாக அறிவோம். இல்லையென்றால், பூமியிலுள்ள மற்ற மனிதருக்கும் எங்களுக்கும் வித்தியாசமேயில்லை” என்றான்.
௧௭ அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ கேட்டபடியே நான் செய்வேன். உன்னில் சந்தோஷம் அடைந்திருக்கிறேன், உன்னை நான் நன்கு அறிவேன்.” என்றார்.
௧௮ அப்போது மோசே, “இப்போது உமது மகிமையை எனக்குக் காட்டும்” என்றான்.
௧௯ கர்த்தர், “என் பரிபூரண நன்மை உனக்கு முன் செல்லும்படி செய்வேன். நானே கர்த்தர், நீ கேட்கும்படி என் பெயரை அறிவிப்பேன். நான் விரும்பும் யாருக்கும் எனது இரக்கத்தையும், அன்பையும் காட்டுவேன். ௨௦ ஆனால் நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. எந்த மனிதனும் என்னைப் பார்த்து பின்பு உயிரோடு இருக்க முடியாது.
௨௧ “எனக்கருகிலுள்ள ஒரு இடத்தில் ஒரு பாறை உள்ளது. நீ அப்பாறையின் மேல் ஏறி நில். ௨௨ எனது மகிமை அவ்விடத்தைக் கடந்து செல்லும். நான் உன்னைத் தாண்டும்போது உன்னை அந்தப் பாறையின் வெடிப்பில் வைத்து என் கரங்களால் உன்னை மூடுவேன். ௨௩ பின் எனது கைகளை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய், ஆனால் நீ என் முகத்தைக் காணமாட்டாய்” என்றார்.