௧௧
எதிர்காலத்தைத் தைரியமாக எதிர்கொள்
௧ நீ எங்கு சென்றாலும் நல்லவற்றையே செய். அப்போது நீ செய்த நன்மைகள் உனக்கே திரும்பவரும்.
௨ உனக்குரிய பொருட்களைப் பல்வேறு நற்காரியங்களுக்காகப் பங்கிட்டுக் கொடு. பூமியில் என்னென்ன கேடுகள் நடைபெறும் என்று உனக்குத் தெரியாது.
௩ நீ சிலவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேகம் மழையால் நிறைந்திருந்தால், அது பூமியில் தண்ணீரை ஊற்றும். மரமானது வடக்கே விழுந்தாலும் தெற்கே விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கும்.
௪ ஆனால் சிலவற்றைப்பற்றி உன்னால் உறுதியாகக் கூறமுடியாது. நீ ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவன் சரியான பருவம் வரட்டுமென்று காத்திருந்தால் அவனால் விதைக்க முடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழை வருமோ என்று அஞ்சுகிறவன் ஒருபோதும் அறுவடை செய்யமாட்டான்.
௫ காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது. தாயின் கருவிலே ஒரு குழந்தை எவ்வாறு வளர்கின்றது என்பதும் உனக்குத் தெரியாது. இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.
௬ எனவே அதிகாலையிலே நடுவை செய். மாலைவரை உன் வேலையை நிறுத்தாமல் செய். ஏனென்றால், எது உன்னை செல்வந்தனாக்கும் என்பதும் உனக்குத் தெரியாது. நீ செய்கிற அனைத்துமே உனக்கு வெற்றியைத் தரலாம்.
௭ உயிரோடு இருப்பது நல்லது. சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது. ௮ உன் வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு நாளையும் நீ அனுபவிக்கவேண்டும். எவ்வளவுகாலம் வாழ்வாய் என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் நீ மரித்துப் போவாய் என்பதை நினைத்துக்கொள். நீ உயிரோடிருக்கும் நாட்களைவிட மரித்த பின் உள்ள நாட்களே மிக அதிகம். நீ மரித்த பிறகு எதையும் செய்யமுடியாது.
இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவை செய்
௯ இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள். அனுபவியுங்கள். உங்கள் மனம் போனபடி இருங்கள். நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். ௧௦ உங்கள் கோபம் உங்களைக் கட்டுப்படுத்தும்படிவிடாதீர்கள். உங்கள் உடல் உங்களைப் பாவம் செய்யத் தூண்டும்படி விடாதீர்கள். ஜனங்கள், இளமையாய் இருக்கும்போது முட்டாள்தனமானவற்றையே செய்வார்கள்.