ஞான மொழிகளின் ஒரு தொகுப்பு
௧ நல்ல மணமிக்கப் பொருட்களைவிட நல்ல பெயரைப் பெறுவது நல்லது.
ஒருவனது பிறந்த நாளைவிட மரித்தநாளும் சிறந்ததுதான்.
௨ விருந்துகளுக்குச் செல்வதைவிட கல்லறைக்குச் செல்வது சிறந்தது.
ஏனென்றால் எல்லோரும் மரிக்க வேண்டியவர்களே.
வாழ்கின்ற அனைவரும் இதனை ஒப்புக்கொள்ளவேண்டும்.
௩ சிரிப்பைவிடச் சோகம் சிறந்தது.
ஏனென்றால் நமது முகம் சோகமடையும்போது நமது இதயம் நல்லதாகிறது.
௪ ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான்.
ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்ல நேரத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான்.
௫ ஞானமுள்ளவனால் விமர்சிக்கப்படுவது
அறிவற்றவர்களால் புகழப்படுவதைவிட நல்லது.
௬ அறிவற்றவர்களின் சிரிப்பு பயனற்றது.
அது பானையின் கீழே எரியும் முட்களைப் போன்றது.
முட்கள் வேகமாக எரியும்,
எனவே பானை சூடாகாது.
௭ எவராவது போதுமான பணம் கொடுப்பதானால் ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார்.
அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலை அழித்துவிடும்.
௮ ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது.
ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது.
௯ விரைவாகக் கோபம் அடையாதே.
ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும்.
௧௦ “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே.
என்ன நடந்தது?” என்று கேட்காதே.
அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது.
 
௧௧ உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம் அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள் தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள். ௧௨ ஞானமுள்ளவனால் செல்வந்தனாக முடியும். ஞானம் அதன் சொந்தக்காரனைப் பாதுகாக்கும்.
௧௩ தேவனால் படைக்கப்பட்ட பொருட்களைப் பாருங்கள். ஒருவேளை அது தவறு என்று நினைத்தாலும் உன்னால் எதையும் மாற்ற முடியாது. ௧௪ வாழ்க்கை நல்லதாக இருந்தால், அனுபவி. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது தேவன் நமக்கு நல்ல காலத்தையும் கஷ்டகாலத்தையும் கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பது எவருக்கும் தெரியாது.
ஜனங்களால் உண்மையில் நல்லவர்களாக முடியாது
௧௫ எனது குறுகிய வாழ்வில் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நல்லவர்கள் இளமையிலேயே மரித்துப்போகிறார்கள். தீயவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் பார்த்திருக்கிறேன். ௧௬-௧௭ ஏன் நீ உன்னையே கொன்றுகொள்கிறாய். அதிக நல்லவனாகவும் அதிக கெட்டவனாகவும் இராதே. நீ அதிக ஞானமுள்ளவனாகவும் அதிக முட்டாளாகவும் இராதே. உனக்குரிய காலத்திற்கு முன் நீ ஏன் மரிக்கவேண்டும்?
௧௮ இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமுமாய் இருக்க முயற்சிசெய். தேவனுடைய பக்தர்களும் கூட கொஞ்சம் நல்லவர்களாகவும் கொஞ்சம் தீயவர்களாகவும் இருக்கின்றனர். ௧௯-௨௦ பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. ஞானம் ஒருவனுக்குப் பலத்தைக் கொடுக்கிறது. பட்டணத்திலுள்ள பத்து முட்டாள் தலைவர்களைவிட ஒரு ஞானவான் பலமுள்ளவன்.
௨௧ ஜனங்கள் சொல்லுகின்ற அனைத்தையும் நீ கேட்காதே. உனது சொந்த வேலைக்காரனே உனக்கு எதிராகப் பேசுவதை நீ கேட்கலாம். ௨௨ மற்றவர்களைப்பற்றி நீயே பல தடவை அவதூறு சொல்லியிருப்பதை நீ அறியலாம்.
௨௩ நான் எனது ஞானத்தைப் பயன்படுத்தி இவற்றைப்பற்றிச் சிந்தித்தேன். நான் உண்மையில் ஞானமுள்ளவனாக இருக்க விரும்பினேன். ஆனால் அது முடியாமற்போனது. ௨௪ ஏன் பல விஷயங்கள் இவ்வாறு இருக்கின்றன என்று எனக்குத் தெரிய வில்லை. இதனைப் புரிந்துக்கொள்வது எவருக்கும் கடினம்தான். ௨௫ நான சற்றுக் கடினப்பட்டு முயன்று ஞானத்தைப் பெற்றேன். நான், எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுகொள்ள விரும்பினேன்.
நான் என்ன கற்றுக்கொண்டேன்? கெட்டவனாக இருப்பது முட்டாள்தனம் என்பதைக் கற்றேன். ஒரு அறிவற்றவனைப்போன்று நடிப்பதும் பைத்தியகாரத்தனமானதுதான். ௨௬ சில பெண்கள் கண்ணிகளைப்போன்று ஆபத்தானவர்கள் என்பதை அறிந்துக்கொண்டேன். அவர்களின் இதயம் வலைகளைப் போன்றது, அவர்களது கைகள்
சங்கிலிகளைப் போன்றவை. இத்தகைய பெண்களிடம் அகப்பட்டுக்கொள்வது மரணத்தைவிட பயங்கரமானது. தேவனைப் பின்பற்றுகிற ஒருவன் இத்தகைய பெண்களிடம் இருந்து விலகி ஓடுவான். பாவியோ இவர்களிடம் அகப்பட்டுக்கொள்வான்.
௨௭-௨௮ பிரசங்கி, “என்னால் எத்தகைய பதிலைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காகவே நான் இவற்றையெல்லாம் சேர்க்கிறேன். நான் இன்னும் பதில்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாகக் கண்டுபிடித்தேன். ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.”
௨௯ “தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர். இதுவும் நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடமாகும்” என்று கூறுகிறான்.