௧௦
பவுலும்-தேவசபையும்
௧ நான் பவுல். உங்களை வேண்டிக்கொள்கிறேன். கிறிஸ்துவின் கருணையோடும், சாந்தத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களோடு இருக்கும்போது தாழ்மையுடையவனாகவும் உங்களைவிட்டுத் தூரமாயிருக்கும்போது உங்கள் மேல் கண்டிப்புடனும் இருப்பதாகச் சிலர் என்னிடம் கூறுகிறார்கள். ௨ நாங்கள் உலக நடைமுறைப்படி வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கின்றனர்.அங்கு வரும்போது அவர்களிடம் நான் தைரியமாக இருக்கவேண்டும். நான் அங்கு வரும்போது, உங்களிடம் கண்டிப்பாய் அந்த தைரியத்தைப் பயன்படுத்தாதபடிக்கு இருக்க நான் பிரார்த்திக்கிறேன். ௩ நாம் மனிதர்கள். ஆனால் உலகம் போரிடும் முறையைப் போலவே போரிடுவதில்லை. ௪ உலகத்தார் பயன்படுத்தும் ஆயுதங்களிருந்து முற்றிலும் மாறான வேறுவகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம். நமது ஆயுதங்களுக்கான சக்தியைத் தேவனிடமிருந்து பெறுகிறோம். இவை பகைவர்களின் வலிமையான இடங்களை அழித்துவிடும். நாம் மக்களின் விவாதங்களை அழிக்கிறோம். ௫ தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம். ௬ அடிபணியாத எவரையும் தண்டிக்கத் தயாராக இருக்கிறோம். முதலில் நீங்கள் முழுமையாக அடிபணியுமாறு விரும்புகிறோம்.
௭ உங்களுக்கு முன்னாலுள்ள உண்மைகளை நீங்கள் கவனித்துகொள்ள வேண்டும். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நம்புவானேயானால் பிறரைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ௮ கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால் உங்களைத் தூக்கியெறிய இந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்களை பலப்படுத்தவே கொடுத்திருக்கிறார். அதனால் அதுபற்றி பெருமைப்பட்டுக்கொள்ள நான் வெட்கப்படவில்லை. ௯ இந்த நிருபத்தின் மூலம் உங்களைப் பயமுறுத்துகிறவனாய் நான் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். ௧௦ ஆனால் சிலரோ, “பவுலின் நிருபங்கள் பலமுள்ளவை; மிகவும் முக்கியமானவை. ஆனால் அவன் எங்களோடு இருக்கும்போது பலவீனனாக இருக்கிறான். அவன் பேச்சு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். ௧௧ “நாங்கள் இப்பொழுது அங்கே உங்களோடு இல்லை. அதனால் நிருபத்தின் மூலம் பேசுகிறோம். ஆனால் நாங்கள் உங்களோடு இருக்கும்போதும் நிருபத்தில் உள்ளது போலவே செயல்படும் அதிகாரத்துடன் இருப்போம்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
௧௨ தம்மைத் தாமே முக்கியமானவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் குழுவுடன் சேர நாங்கள் விரும்பவில்லை. எங்களை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பமாட்டோம். அவர்களைப் போன்று ஆகவும் விரும்பமாட்டோம். அவர்கள் தங்களைக்கொண்டே தங்களை அளக்கிறார்கள். தங்களைக்கொண்டே தங்களை ஒப்பிடுகின்றனர். அவர்கள் அறிவுள்ளவர்கள் அல்ல.
௧௩ எங்களுக்குத் தரப்பட்ட வேலைகளின் அளவை மீறி எப்போதும் பெருமைபேசிக்கொள்ளமாட்டோம். தேவன் எங்களுக்குக் கொடுத்த பணியின் அளவிற்கே பெருமை கொள்ளுகிறோம். உங்கள் நடுவில் இதுவும் எங்கள் வேலைகளுள் ஒன்றாக இருக்கிறது. ௧௪ அளவுமீறி பெருமை பேசித் திரிபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் உங்களிடம் வராமல் இருந்திருந்தால் எங்களைப் பற்றி அளவுக்கு மீறி பெருமை பேசி இருப்போம். ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியோடு உங்களிடம் வந்தோம். ௧௫ மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு எங்கள் அளவைக் கடந்து பெருமை பாராட்டமாட்டோம். உங்கள் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் உங்களிடையே எங்கள் வேலையானது மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் உதவுவீர்கள் என்றும் நம்புகிறோம். ௧௬ உங்கள் இருப்பிடத்துக்கு அப்பாலும் நாங்கள் நற்செய்தியைப் பரப்ப விரும்புகிறோம். மற்றவர்களால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டதை எங்களால் செய்யப்பட்டதாகக் கூறி பெருமைப்படமாட்டோம். ௧௭ ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.”✡ எரே. 9:24-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ௧௮ தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.