௧௭
இஸ்ரவேலருக்கு கோலியாத்தின் சவால்
௧ பெலிஸ்தர் போரிடும் பொருட்டு
படையாட்களைக் கூட்டினார்கள். அவர்கள் யூதாவிலுள்ள சோக்கோவில் கூடினார்கள். அவர்கள் கூடிய எபேஸ்தம்மீம் எனும் இடம் சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் இடையில் இருந்தது.
௨ சவுலும், இஸ்ரவேல் வீரர்களும் ஒன்று கூடினார்கள். இவர்களின் முகாம் ஏலாவிலிருந்தது. வீரர்கள் சண்டையிடத் தயாராக இருந்தனர். ௩ பெலிஸ்தியர் மலையின் மேல் இருந்தனர். அடுத்த மலையில் இஸ்ரவேலர் இருந்தனர். இடையில் பள்ளத்தாக்கு இருந்தது.
௪ பெலிஸ்தியரிடம் கோலியாத் என்னும் வீரன் இருந்தான். அவன் காத் என்னும் ஊரினன். 9 அடி உயரமாக இருந்தான். ௫ ஒரு வெண்கல கிரீடமும், போர்க்கவசமும் தரித்திருந்தான். அது 5,000 சேக்கல் வெண்கலம் எடையுள்ளதாயிருந்தது. ௬ அவன் கால்களில் வெண்கல கவசத்தையும், தோள்களில் வெண்கல கேடகத்தையும் அணிந்திருந்தான். ௭ அவனது ஈட்டியின் பிடி நெசவுக்காரரின் படைமரம் போல் இருக்கும். ஈட்டியின் அலகு 600 சேக்கல் இரும்பு எடையுள்ளதாக இருந்தது. கோலியாத்தின் கேடயம் சுமந்த வீரன், அவனுக்கு முன்னால் நடப்பான்.
௮ தினந்தோறும் அவன் வெளியே வந்து இஸ்ரவேலரைப் பார்த்து, சத்தமாக சண்டைக்கு சவால்விடுவான். அவன், “உங்களுடைய எல்லா வீரர்களும் போருக்குத் தயாராக ஏன் அணிவகுத்து நிற்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் சவுலின் வேலைக்காரர்கள். நான் பெலிஸ்தன். யாரேனும் ஒருவனைத் தேர்தெடுத்து என்னோடு சண்டையிட அனுப்புங்கள். ௯ அவன் என்னைக் கொன்றுவிட்டால் நாங்கள் (பெலிஸ்தர்) அனைவரும் உங்களது அடிமை. நான் அவனைக் கொன்றுவிட்டால் நீங்கள் எங்கள் அடிமை! நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்றான்.
௧௦ மேலும் அவன், “நான் இன்று இஸ்ரவேல் சேனையை கேலிச்செய்தேன்! உங்களில் ஒருவனுக்குத் தைரியமிருந்தால் என்னிடம் அனுப்பி சண்டையிட்டுப் பாருங்கள்!” என்றான்.
௧௧ சவுலும் அவனது வீரர்களும் கோலியாத் சொன்னதைக் கேட்டு மிகவும் நடுங்கினார்கள்.
தாவீது போர் முனைக்குச் செல்கிறான்
௧௨ தாவீது ஈசாயின் மகன், யூதாவிலுள்ள பெத்லேகேமில் எப்பிராத்தா குடும்பத்தைச் சேர்ந்தவன். ஈசாயிக்கு 8 மகன்கள். சவுலின் காலத்தில் ஈசாய் முதிர் வயதாக இருந்தான். ௧௩ ஈசாயின் 3 பெரிய மகன்கள் சவுலுடன் போருக்குச் சென்றிருந்தனர். எலியாப் முதல் மகன். அபினதாப் இரண்டாவது மகன். சம்மா மூன்றவாது மகன். ௧௪ தாவீது கடைசி மகன். பெரிய மூன்று மகன்களும் சவுலின் படையில் இருந்தனர். ௧௫ தாவீது சவுலை விட்டு விலகி அவ்வப்போது பெத்லேகேமில் தன் தந்தையின் ஆடுகளைக் மேய்க்கப் போவான்.
௧௬ கோலியாத் தினமும் காலையில் வந்து இவ்வாறு 40 நாட்கள் இஸ்ரவேல் சேனையைக் கேலிச் செய்தான்.
௧௭ ஒருநாள் ஈசாய் தாவீதிடம், “கூடையில் வறுத்த பயிரையும், 10 அப்பங்களையும் கொண்டு போய் முகாமில் உள்ள உன் சகோதரர்களுக்கு கொடு. ௧௮ இந்த 10 பாலாடைக் கட்டிகளையும் உன் சகோதரர் குழுவின் 1,000 வீரருக்கு அதிபதியினிடம் கொடு. உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பார். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் வாங்கி வா! ௧௯ ஏலா பள்ளத்தாக்கில் உன் சகோதரர்கள் சவுலின் சேனையில் பெலிஸ்தருக்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்றான்.
௨௦ அதிகாலையில் தாவீது வேறு ஒரு மேய்ப்பவனிடம் ஆடுகளை ஒப்படைத்தான். தாவீது உணவை எடுத்துக்கொண்டு ஈசாய் சொன்னபடி புறப்பட்டான். தாவீது தனது வண்டியை முகாமுக்குச் செலுத்தினான். தாவீது வந்து சேர்ந்தபோது வீரர்கள் தங்கள் போர்புரியும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தனர். வீரர்கள் தங்கள் போர் முழக்கங்களை எழுப்ப துவங்கினார்கள். ௨௧ இஸ்ரவேலரும் பெலிஸ்தியரும் அணிவகுத்து போருக்குத் தயாரானார்கள்.
௨௨ தாவீது தான் கொண்டு போனதை, பொருட்களின் காப்பாளனிடம் கொடுத்தான். பின் இஸ்ரவேல் வீரர்களின் அணிக்கு ஓடி, தன் சகோதரர்களைக் குறித்து விசாரித்தான். ௨௩ தன் சகோதரர்களோடு பேச ஆரம்பித்தான். அப்போது, கோலியாத் பெலிஸ்தர் முகாமிலிருந்து வெளியே வந்து, வழக்கம்போல கேலிச் செய்தான். அவன் சொன்னதையெல்லாம் தாவீது கேட்டான்.
௨௪ அவனைக் கண்டு இஸ்ரவேலர் பயந்து ஓடிப்போனார்கள். அவர்களுக்கு அவன் மீது பெரிய பயமிருந்தது. ௨௫ இஸ்ரவேலர், “கோலியாத் வெளியில் வந்து இஸ்ரவேலரை மீண்டும் மீண்டும் கேலிக்குள்ளாக்கினதைப் பார்த்தீர்களா! அவனை யார் கொன்றாலும் சவுல் அரசன் அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனது மகளை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான். சவுல் அவனது குடும்பத்திற்கு இஸ்ரவேலின் மத்தியில் சுதந்திரம் அளிப்பான்” என்றார்கள்.
௨௬ தாவீதோ அவர்களிடம், “அவன் என்ன சொல்லுவது? அவனைக் கொன்று இஸ்ரவேலில் இருந்து அவமானத்தை களைபவனுக்கு விருது என்ன வேண்டிக்கிடக்கிறது? இஸ்ரவேலர் இந்த நிந்தையைச் சுமக்க வேண்டுமா? இத்தனைக்கும் யார் இந்த கோலியாத்? இவன் யாரோ அந்நியன்* அந்நியன் இஸ்ரவேலரின் முறைப்படி விருத்தசேதனம் (ஆண்டவரும் இஸ்ரவேலரும் செய்துகொள்ளும் உடன்படிக்கையின் முறை) செய்யாதவன். சாதாரண பெலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு எதிராகப் பேச அவன் எப்படி நினைக்கலாம்?” என்று கேட்டான்.
௨௭ அதற்கு இஸ்ரவேலன், கோலியாத்தைக் கொன்றால் கிடைக்கும் மேன்மையைப் பற்றி சொன்னான். ௨௮ தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்கு சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. யுத்தத்தை வேடிக்கை பார்க்கவே நீ இங்கு வந்தாய்!” என்றான்.
௨௯ அதற்கு தாவீது, “நான் இப்போது என்ன செய்துவிட்டேன்? நான் ஒரு தவறும் செய்யவில்லை! வெறுமனே பேசிக் கொண்டிருந்தேன்” என்றான். ௩௦ தாவீது வேறு சிலரிடம் அதே கேள்விகளைத் திரும்ப கேட்டான். அவர்களும் அதே பதில் சொன்னார்கள்.
௩௧ தாவீது சொல்வதைச் சிலர் கேட்டு அவனைச் சவுலிடம் அழைத்துச் சென்றார்கள். ௩௨ தாவீது சவுலிடம், “கோலியாத்துக்காக யாரும் நடுங்க வேண்டாம். நான் உங்கள் சேவகன். நான் போய் அவனோடு போரிடுகிறேன்!” என்றான்.
௩௩ “உன்னால் வெளியே போய் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டைபோட முடியாது. நீ ஒரு படை வீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் போரிட்டு வருகிறான்” என்றான்.
௩௪ ஆனால் தாவீது சவுலிடம், “நான் ஒரு இடையன், ஆடுகளை மேய்த்து வருபவன். இரு தடவை ஒரு சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தூக்கியபோது, ௩௫ அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என் மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்து கிழித்துக் கொன்றேன். ௩௬ சிங்கத்தையும் கரடியையும் கொன்ற என்னால், இந்த அந்நியனையும் விலங்குகளைப்போல் கொல்லமுடியும்! அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையைக் கேலி செய்ததால் அவன் கொல்லப்படுவான். ௩௭ கர்த்தர் என்னை சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து காப்பாற்றியது போலவே பெலிஸ்தனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்” என்றான்.
சவுல் தாவீதிடம், “கர்த்தர் உன்னோடு இருப்பாராக, நீ போ” என்றான். ௩௮ சவுல் தன் சொந்த ஆடையை தாவீதுக்கு அணிவித்தான். தலையில் வெண்கல தலைச் சிராவை, பிற யுத்த சீருடையும் போடுவித்தான். ௩௯ தாவீது வாளை எடுத்துக்கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணிந்து கொள்ளும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை.
தாவீது சவுலிடம், “இவற்றை அணிந்து என்னால் சண்டை போட முடியாது. அணிந்து பழக்கமில்லை” என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றினான். ௪௦ தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு 5 கூழங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல் பையில் போட்டுக் கொண்டான். கையில் வில் கவணை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான்.
தாவீது கோலியாத்தைக் கொல்கிறான்
௪௧ கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கேடயத்தை ஏந்திய உதவியாள் முன்னே நடந்தான். ௪௨ கோலியாத் தாவீதைப் பார்த்து, அவன் யுத்த பயிற்சி இல்லாத சிவந்த முகத்தையுடைய இளைஞன் என்று கண்டு நகைத்தான். ௪௩ “ஏன் இந்த கைத்தடி? ஒரு நாயை விரட்டுவது போல் நீ என்னை விரட்டப் போகிறாயா?” என்று கோலியாத் கேட்டான். அதற்கு பின் கோலியாத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லி தாவீதை நிந்தித்தான். ௪௪ கோலியாத் தாவீதிடம் “இங்கே வா, உனது உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுகிறேன்!” என்றான்.
௪௫ தாவீது அவனிடம், “நீ உனது பட்டயம், ஈட்டியைப் பிடித்துகொண்டு வந்துள்ளாய். நானோ இஸ்ரவேல் சேனைகளின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் வந்துள்ளேன். அவரைத் தூஷித்து நீ நிந்தித்தாய். ௪௬ இன்று உன்னைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார். இன்று உன் தலையை வெட்டி உன் உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாக்குவேன். மற்ற பெலிஸ்தரையும் இவ்வாறே செய்வோம்! அப்போது இஸ்ரவேலில் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று உலகம் அறிந்துக்கொள்ளும்! ௪௭ ஜனங்களை மீட்கும்படி கர்த்தருக்குப் பட்டயமும் ஈட்டியும் தேவையில்லை என்பதை இங்குள்ளவர்களும் அறிவார்கள். யுத்தம் கர்த்தருடையது! பெலிஸ்தியர்களாகிய உங்களெல்லாரையும் வெல்ல கர்த்தர் உதவுவார்” என்றான்.
௪௮ கோலியாத் தாவீதை தாக்கும்படி சீறி எழுந்து நெருங்கி வந்தான். தாவீதும் நெருங்கி ஓடி,
௪௯ தனது தோல் பையிலிருந்து கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி வீசினான். அது கோலியாத்தின் நெற்றியில் இரு கண்களுக்கும் நடுவில்பட்டது. அவன் நெற்றிக்குள் அது புகவே அவன் முகங்குப்புற விழுந்தான்.
௫௦ இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரே கவண் கல்லால் சாகடித்தான். தாவீதிடம் பட்டயம் இருக்கவில்லை. ௫௧ அதனால் ஓடிப்போய் அந்த பெலிஸ்தியன் அருகில் நின்று, கோலியாத்தின் பட்டயத்தை அவனது உறையில் இருந்து உருவி அதைக் கொண்டே அவனது தலையை சீவினான். இவ்விதமாகத்தான் தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தை கொன்றான்.
மற்ற பெலிஸ்தியர் தங்களது மாவீரன் மரித்ததைப் பார்த்து பின்வாங்கி ஓடினார்கள். ௫௨ இஸ்ரவேல் வீரர் அவர்களைத் துரத்தி, காத் மற்றும் எக்ரோன் எல்லைவரை விரட்டினார்கள். சாராயீமின் சாலையோரங்களில் காத் மற்றும் எக்ரோன்வரை பலரைக் கொன்று குவித்தனர். ௫௩ பின்னர் பெலிஸ்தியரின் முகாமிற்குள் சென்று பொருட்களை எடுத்து வந்தனர்.
௫௪ தாவீது கோவியாத்தின் தலையை எருசலேமிற்கு எடுத்துச் சென்றான். கோலியாத்தின் ஆயுதங்களை தன் சொந்த கூடாரத்தில் வைத்தான்.
சவுல் தாவீதுக்கு அஞ்சத் தொடங்குகிறான்
௫௫ தாவீது சண்டைக்குப் போவதைப் பார்த்தான். சவுல் தன் தளபதியான அப்னேரிடம், “இவனது தந்தை யார்?” எனக் கேட்டான்.
அப்னேரும், “எனக்குத் தெரியாது ஐயா” என்றான்.
௫௬ சவுலோ, “இவனது தந்தையைப்பற்றி தெரிந்து வா” என்றான்.
௫௭ தாவீது கோலியாத்தைக் கொன்றுவிட்டு திரும்பும்போது அப்னேர் அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். தாவீது இன்னும் கோலியாத்தின் தலையைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
௫௮ சவுல் அவனிடம், “உன் தந்தை யார்?” எனக் கேட்டான்.
அதற்கு தாவீது, “நான் உங்கள் வேலைக்காரனான, பெத்லேகேமில் உள்ள ஈசாயின் மகன்” என்றான்.
*௧௭:௨௬: அந்நியன் இஸ்ரவேலரின் முறைப்படி விருத்தசேதனம் (ஆண்டவரும் இஸ்ரவேலரும் செய்துகொள்ளும் உடன்படிக்கையின் முறை) செய்யாதவன்.