௨௮
ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்
௧ இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களையெல்லாம் தாவீது கூட்டினான். அவர்களை எருசலேமிற்கு வரும்படி கட்டளையிட்டான். தாவீது கோத்திரங்களின் தலைவர்களையும், அரசனது படையில் பணியாற்றும் தளபதிகளையும், பிரதானிகளையும் கூட்டினான். அரசனுக்கும் அவனது மகன்களுக்கும் உரிய சொத்துக்களையும் மிருகங்களையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் கூட்டினான், அதோடு முக்கியமான அதிகாரிகளையும், வலிமைமிக்க வீரர்களையும், தைரியமிக்க வீரத்தலைவர்களையும் கூட்டினான்.
௨ தாவீது எழுந்து நின்று அவர்களிடம், “நான் சொல்வதைக் கவனியுங்கள், எனது ஜனங்களே, சகோதரர்களே, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்க ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்று மனதில் நினைத்துள்ளேன். தேவனுடைய பாதப்படியை வைப்பதற்காக ஒரு இடத்தைக் கட்ட விரும்புகிறேன். தேவனுக்காக ஆலயம் கட்ட திட்டமிட்டுள்ளேன். ௩ ஆனால் தேவன் என்னிடம், ‘வேண்டாம் தாவீது, எனது பேரால் நீ ஆலயம் கட்டவேண்டாம். ஏனென்றால் நீ ஒரு போர்வீரன், நீ பலரைக் கொன்றிருக்கிறாய்’ என்றார்.
௪ “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தை, இஸ்ரவேலின் பன்னிரண்டு இனங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தார். யூதாவின் கோத்திரத்தில் கர்த்தர் என் தந்தையின் வம்சத்தைத் தேர்ந்தெடுத்தார். அக்குடும்பத்திலும் என்னை தேவன் இஸ்ரவேலின் அரசனாகத் தேர்ந்தெடுத்தார்! தேவன் என்னை என்றென்றைக்கும் இஸ்ரவேலின் அரசனாக்க விரும்பினார்! ௫ கர்த்தர் எனக்கு பல மகன்களைத் தந்துள்ளார். அவர்களினுள்ளும், இஸ்ரவேலின் புதிய அரசனாக சாலொமோனைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் உண்மையில், கர்த்தருடைய அரசாங்கம் இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் உள்ளது. ௬ கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் மகனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது மகனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன். ௭ சாலொமோன் என் சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிறான். அவன் தொடர்ந்து இவ்வாறு எனது சட்டங்களுக்கு அடி பணிந்து வந்தால், அவனது அரசை என்றென்றைக்கும் பலமுள்ளதாக ஆக்குவேன்!’ என்றார்.”
௮ “இப்போது இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாகவும், தேவனுக்கு முன்பாகவும், நான் கூறுகிறேன். தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் கவனமாக இருங்கள்! அப்போது தான் இந்த நல்ல நிலம் உங்களுடையதாக இருக்கும். என்றென்றும் இதனை உங்கள் சந்ததிகளுக்கும் தர இயலும்.
௯ “என் மகன் சாலொமோனாகிய நீ உன் தந்தையின் தேவனைப் பற்றி அறிவாய், சுத்தமான இருதயத்தோடு தேவனுக்கு சேவை செய். தேவனுக்கு சேவை செய்வதில் மனதில் மகிழ்ச்சிகொள். ஏனென்றால், கர்த்தருக்கு ஒவ்வொருவரின் மனதினுள்ளும் என்ன இருக்கிறது என்பது தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் கர்த்தர் புரிந்துகொள்வார். நீ உதவிக்கு கர்த்தரிடம் போனால், அவர் பதில் தருவார். ஆனால் நீ கர்த்தரிடமிருந்து விலகினால் அவர் என்றென்றைக்கும் விட்டுவிடுவார். ௧௦ சாலொமோன், கர்த்தர் தன் ஆலயத்தை கட்ட உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள். உறுதியாக இருந்து இதனைச் செய்துமுடி” என்றான்.
௧௧ பிறகு அவன் தன் மகன் சாலொமோனுக்கு ஆலயத்தை கட்டுவதற்கான திட்டங்களைப்பற்றிக் கூறினான். நுழைவு மண்டபம், கட்டிடங்கள், அறைகள், கருவூல அறைகள், அதன் மேல் வீடுகள், அதின் உள்ளறைகள், கிருபாசனம் போன்றவற்றின் மாதிரிகளைக் கொடுத்தான். ௧௨ தாவீது ஆலயத்தின் அனைத்து பாகங்களுக்கும் திட்டம் வைத்திருந்தான். அவன் அவற்றை சாலொமோனிடம் கொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் திட்டங்களையும் கொடுத்தான். அவன் கருவூல அறைகளுக்கும் பரிசுத்தமானப் பொருட்கள் வைக்கும் அறைகளுக்கும் உரிய திட்டங்களையும் கொடுத்தான். ௧௩ ஆசாரியர் குழுக்களைப் பற்றியும் லேவியர்களைப் பற்றியும் சாலொமோனுக்கு தாவீது கூறினான். கர்த்தருடைய ஆலயத்தில் செய்ய வேண்டிய சேவைகளைப் பற்றியும் சேவைகளுக்குரிய பொருட்களைப் பற்றியும் கூறினான். ௧௪ ஆலயத்தில் பயன்படுத்தவேண்டிய தங்கம், வெள்ளி பற்றிய அளவினையும் கூறினான். ௧௫ தங்க விளக்குகள் மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. வெள்ளி விளக்குகள், மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. இவ்விளக்குகளுக்கும் விளக்குத் தண்டுகளுக்கும் எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்பதையும் சொன்னான். தேவைப்படுகிற இடங்களில் வெவ்வேறு விளக்குத் தண்டுகள் இருந்தன. ௧௬ பரிசுத்த அப்பம் வைப்பதற்குரிய மேஜை செய்ய தேவையான தங்கம் பற்றியும் கூறினான். வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியின் அளவைப் பற்றியும் தாவீது கூறினான். ௧௭ முள் குறடுகளுக்கும் தூவப் பயன்படும் கலங்களுக்கும், தட்டுகளுக்கும் வேண்டிய தங்கத்தைப் பற்றியும் கூறினான். பொன் கிண்ணங்களுக்குத் தேவையான பொன்னின் அளவையும், வெள்ளிக் கிண்ணங்களுக்கு தேவையான வெள்ளியின் அளவையும் தாவீது கூறினான். ௧௮ நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடத்திற்கு வேண்டிய பரிசுத்த பொன்னின் அளவைப் பற்றியும் கூறினான். தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்தான். இவை தங்கத்தால் ஆனவை.
௧௯ தாவீது, “கர்த்தருடைய வழிகாட்டுதலால் இத்திட்டங்களை நான் எழுதினேன். அவரது உதவியால்தான் அனைத்தும் திட்டமிடப்பட்டது” என்றான்.
௨௦ தாவீது மேலும் தன் மகன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப் போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய். ௨௧ ஆசாரியர்களின் குழுவும், லேவியர்களும் தேவாலயத்தின் எல்லா வேலைகளுக்கும் தயாராக உள்ளனர். திறமையுள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆலயத்தின் வேலைகளுக்கு உதவுவார்கள். உனது அனைத்து ஆணைகளுக்கும், அதிகாரிகளும் ஜனங்களும் கீழ்ப்படிவார்கள்” என்றான்.