௧௭
கர்த்தர் தாவீதிற்கு வாக்குறுதியளித்தல்
௧ தாவீது, தன் வீட்டிற்குச் சென்ற பிறகு,
அவன் தீர்க்கதரிசி நாத்தானிடம், “பார், நான் கேதுரு மரங்களால் ஆன வீட்டில் இருக்கிறேன். ஆனால் உடன்படிக்கைப் பெட்டியோ கூடாரத்தில் இருக்கிறது. எனவே தேவனுக்காக நான் ஒரு ஆலயம் கட்ட விரும்புகிறேன்” என்றான்.
௨ நாத்தான் தாவீதிற்கு, “நீர் என்ன விரும்புகிறீரோ அதனைச் செய்யும், உம்மோடு தேவன் இருக்கிறார்” என்று பதிலுரைத் தான்.
௩ ஆனால், அன்று இரவு தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு வந்தது. ௪ தேவன்,
“போய் எனது தொண்டனான தாவீதிடம் கூறு: ‘தாவீது, எனக்காக ஆலயம் கட்ட வேண்டியவன் நீயல்ல. ௫-௬ இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்த நாள் முதல் இன்று வரை நான் ஒரு வீட்டிலும் வசித்ததில்லை. நான் கூடாரத்துடனேயே திரிந்து கொண்டிருந்தேன். இஸ்ரவேலர்களுக்காகச் சிறப்பான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள், எனது ஜனங்களின் மேய்ப்பர்களைப் போன்றவர் கள். இஸ்ரவேலுக்குள் நான் பல்வேறு இடங்களுக்குத் திரிந்து கொண்டிருந்தபோது, நான் அந்தத் தலைவர்களிடம் எனக்குக் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டுமாறு சொன்னதில்லை. எனவே நீங்கள் ஏன் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டவில்லை?’ என்று அவர்களை நான் ஒரு பொழுதும் கேட்டதில்லை.
௭ “இப்போது, இவற்றை என் தொண்டனான தாவீதிடம் கூறு: அவர் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘நீ, வயல்களில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். என் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உன்னை அரசனாக்கினேன். ௮ நீ எங்கே போனாலும் அங்கெல்லாம் நான் உன்னோடு இருந்தேன். நான் உனக்கு முன்னால் போய் உன் பகைவர்களை அழித்தேன். இப்போது, உன்னைப் பூமியிலேயே மிக புகழ்ப்பெற்றவர்களில் ஒருவனாக ஆக்குவேன். ௯ இந்த இடத்தை நான் என் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கிறேன். அவர்கள் இதில் மரங்களை நடுவார்கள். அம்மரங்களுக்கு அடியில் சமாதானத்தோடு இருப்பார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். தீயவர்கள் முன்புபோல அவர்களுக்குத் தீங்கு செய்யமாட்டார்கள். ௧௦ பல தீமைகள் உங்களுக்கு ஏற்பட்டன. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாக்க தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். உங்கள் பகைவர்களையும் தோற்கடிப்பேன்.
“ ‘கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று நான் உனக்குக் கூறுகிறேன். ௧௧ நீ மரித்த பிறகு, உன் முற்பிதாக்களோடு சேருவாய். பிறகு, உன் சொந்த மகனைப் புதிய அரசன் ஆக்குவேன். அவன் உனது மகன்களில் ஒருவன். அவனது அரசைப் பலமாக்குவேன். ௧௨ உனது மகன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். நான் உனது மகனின் சந்ததியை என்றென்றும் ஆட்சி செலுத்தும்படி செய்வேன். ௧௩ நான் அவனது தந்தையாக இருப்பேன். அவன் எனது மகனாக இருப்பான். உனக்கு முன்பு சவுல் அரசனாக இருந்தான். நான் அவனுக்கு அளித்த ஆதரவை நீக்கினேன். ஆனால் நான் உன் மகன் மீது கொண்ட அன்பை நிறுத்தமாட்டேன். ௧௪ நான் அவனை எனது ஆலயத்திற்கும் அரசாங்கத்திற்கும் என்றென்றும் பொறுப்பாளியாக்குவேன். அவனது ஆட்சி என்றென்றும் தொடர்ந்திருக்கும்!’ ” என்றார்.
௧௫ நாத்தான் தான் கண்டத் தரிசனத்தை தாவீதிடம் கூறினான். தேவன் சொன்னதையும் கூறினான்.
தாவீதின் ஜெபம்
௧௬ பிறகு தாவீது அரசன் பரிசுத்தக் கூடாரத்திற்குப் போனான். கர்த்தருக்கு முன்பு உட்கார்ந்தான்.
தாவீது, “தேவனாகிய கர்த்தாவே, நீர் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் எவ்வளவோ செய்திருக்கிறீர். இது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை ௧௭ இவற்றுக்கெல்லாம் மேலாக, எதிர்காலத்தில் என் குடும்பத்திற்கு என்னென்ன நடைபெறும் என்பதையும் நான் அறியுமாறு செய்துவிட்டீர். நீர் என்னை ஒரு மிக முக்கியமான மனிதனாக நடத்தினீர். ௧௮ இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீர் எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறீர். நான் உமது ஊழியன். இதை நீர் அறிவீர். ௧௯ கர்த்தாவே, எனக்காக இந்த அற்புதங்களைச் செய்துள்ளீர். நீர் இவற்றைச் செய்தீர் ஏனென்றால், இவற்றை நீர் விரும்பினீர். ௨௦ உம்மைப்போல் எவருமில்லை கர்த்தாவே. உம்மைத்தவிர வேறு தேவன் இல்லை. வேறு எந்தத் தெய்வமும் இதுபோல் அற்புதங்களைச் செய்ததாக நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை! ௨௧ இஸ்ரவேலைப்போன்று வேறு நாடுகளும் இல்லை. இந்த அதிசயங்களை நீர் செய்த நாடு பூமியிலேயே இஸ்ரவேல் ஒன்று மட்டும்தான். நீர் எங்களை எகிப்திலிருந்து விடுவித்தீர், என்னைச் சுதந்தரமாக்கினீர். உமக்கே நீர் புகழ் சேர்த்தீர்! உமது ஜனங்களுக்கு முன்னால் நீர் சென்றீர். மற்ற ஜனங்கள் தமது நாடுகளை எங்களுக்காக விட்டுச்செல்லும்படி செய்தீர்! ௨௨ இஸ்ரவேல் ஜனங்களை என்றென்றும் உமது ஜனங்களாக ஏற்றுக்கொண்டீர்! கர்த்தாவே, நீர் அவர்களின் தேவனும் ஆனீர்!
௨௩ “கர்த்தாவே, நீர் இந்த வாக்குறுதியை எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் செய்தீர். இப்போது, உமது வாக்குறுதிகளை என்றென்றும் காப்பாற்றுவீர், சொன்னபடியே செய்யும்! ௨௪ நம்பிக்கைக்கு நீர் உரியவர் என்பதைக் காட்டும். ஜனங்கள் உமது நாமத்தை எப்போதும் பெருமைபடுத்துவார்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேலரின் தேவன்!’ என்று என்றென்றும் ஜனங்கள் கூறுவார்கள். நான் உமது தொண்டன். எனது குடும்பத்தைப் பலமுள்ளதாக்கி என்றென்றும் உமக்குச் சேவைச் செய்ய அனுமதியும்.
௨௫ “என் தேவனே, உமது ஊழியக்காரனாகிய என்னிடம் பேசினீர். எனது குடும்பத்தை அரச குடும்பம் ஆக்குவீர் என்பதைத் தெளிவாக்கிவிட்டீர். அதனால் நான் தைரியமாய் இருக்கிறேன். அதனால் தான் உம்மிடம் வேண்டுதல்களை வைத்த வண்ணம் இருக்கிறேன். ௨௬ கர்த்தாவே நீரே தேவன், நீரே இந்த நன்மைகளெல்லாம் எனக்குச் செய்வதாகக் கூறிவிட்டீர். ௨௭ கர்த்தாவே! எனது குடும்பத்தை ஆசீர்வதிக்க மனம்கொண்டீர். வாக்களிக்கும் அளவிற்குக் கருணைகொண்டுள்ளீர். எனது குடும்பம் என்றென்றும் உமக்குச் சேவைசெய்யும் பாக்கியத்தையும் கருணையோடு தந்துள்ளீர். கர்த்தாவே, நீரே எனது குடும்பத்தை ஆசீர்வதித்துவிட்டீர். எனவே எனது குடும்பம் என்றென்றும் ஆசீர்வாதத்திற்கு உட்பட்டது!” என்றான்.